யாழ்ப்பாணத்தில் நுங்கு திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நிலவும் வெப்பமான கால நிலைமை காரணமாக நுங்கு க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
அதனால் ஆட்கள் அற்ற தனியார் காணிகளுக்குள் உள்ள பனை மரங்களில் நுங்குகளை குலை குலையாக திருடர்கள் வெட்டி செல்கின்றனர்.
காணிக்குள் விழும் பனம் பழங்கள் ஊடாகவே பனாட்டு செய்வதாகவும், பனம் பழங்களின் விதைகள் கொண்டு, பனம் பாத்தி செய்து அதன் ஊடாகவே பனம் கிழங்கு, ஒடியல் என்பவற்றை பெற்றுக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பனம் பழத்தின் இளம் பதமாக உள்ள நுங்குகளை குலை குலையாக திருடர்கள் வெட்டி செல்வதனால் பனம் பழம் இல்லாது போகிறது. பனம் பழத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட தமது சிறிய வாழ்வாதாரம் இல்லாமல் போகின்றது. எனவே உரிய தரப்புக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி நுங்கு திருட்டுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பனங்காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.