புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகளே இவ்வாறு அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
குறித்த தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளின் மொத்த பெறுமதி எட்டரை கோடி ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தங்கத்தின் பெறுமதி 74 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் 91 கையடக்க தொலைபேசிகளையும் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த தொலைபேசிகளின் பெறுமதி 4.2 மில்லியன் ரூபா எனவும் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பதில் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்று(23.05.23) முற்பகல் துபாயிலிருந்து நாடு திரும்பிய போது, தங்க பிஸ்கட்கள் மற்றம் கையடக்க தொலைபேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.