249
யாழ்ப்பாணத்தில் பழுதடைந்த இறைச்சியில் கொத்து றொட்டி தாயாரித்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்று 45 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது.
கடந்த 09ஆம் திகதி இரவு, யாழ்ப்பாணம் , ஆணைப்பந்தி சந்திக்கு அருகில் உள்ள உணவகத்தில் கொத்து றொட்டி வாங்கிய நபருக்கு பழுதடைந்த இறைச்சியில் கொத்து றொட்டி தயாரித்து விற்பனை செய்ததாக பாதிக்கப்பட்ட நபரால் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டது.
அதனை அடுத்து மறுநாள் 10ஆம் திகதி காலை மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் குறித்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்ட போது , ஒரு தொகை பழுதடைந்த இறைச்சிகள் , உணவுகள் என்பன மீட்கப்பட்டதுடன் , உணவகத்தில் மேலும் பல சுகாதார குறைப்பாடுகள் காணப்பட்டன.
அவை தொடர்பில் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து , மீட்கப்பட்ட பழுதடைந்த இறைச்சி உள்ளிட்டவற்றை அழிக்க உத்தரவிட்ட நீதவான் , கடைக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீள அழைக்கப்பட்ட போது , உணவக உரிமையாளருக்கு எதிராக 09 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. அவற்றினை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து நீதவான் 45 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் விதித்தார்.
அத்துடன் , உணவகத்தில் இனம் காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து , அது தொடர் பொது சுகாதார பரிசோதகரிடம் அறிக்கை பெற்ற பின்னரே கடையை மீள திறக்க அனுமதிக்க முடியும் என நீதவான் தெரிவித்தார்.
Spread the love