குருந்தூர் மலை விகாரைக்கு சொந்தமான இடத்தை வேறு தரப்பினருக்கு வழங்க தீர்மானிக்கப் படவில்லை என ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். தொல்பொருள் நிபுணர், கலாநிதி எல்லாவெல மேதானந்த தேரர் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின்போது குருந்தூர்மலை விகாரைக்கு சொந்தமான அரச காணி தொடர்பாக ஜனாதிபதி வௌியிட்ட கருத்தை மையப்படுத்தி ஜனாதிபதிக்கு குறித்த கடிதத்தை எழுதியிருந்த எல்லாவெல மேதானந்த தேரர் விகாரைக்கு சொந்தமான காணியை வேறு தரப்பினருக்கு வழங்குவதை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் குருந்தூர்மலை விகாரை இலங்கையர்களுக்கு மிக முக்கியமான தொல்பொருள் இடம் எனும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய எல்லாவெல மேதானந்த தேரருக்கு ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க அனுப்பிய பதில் கடிதத்தில் மேற் குறிப்பிட்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குருந்தூர்மலை விகாரையை அண்மித்து காணப்படும் விவசாய காணிகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பதில் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களை அடையாளம் கண்டு அவற்றை மாவட்ட செயலாளரின் பொறுப்பில் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே இதனூடாக அரசாங்கம் எதிர்பார்க்கும் விடயமாகும் எனவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.