கிரேக்க கடற்பரப்பில் மூழ்கிய படகிலிருந்த 500 குடியேற்றவாசிகள் காணாமல்போயுள்ளனர் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவகம் தெரிவித்துள்ளது. பெருமளவு பெண்களுக்கும் குழந்தைகளிற்கும் என்ன நடந்தது என்பது தெரியவில்லை என மனித உரிமை அலுவலக பேச்சாளர் ஜெரெமி லோரன்ஸ் தெரிவித்துள்ளார்..
உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களிற்கான ஐநா மனித உரிமை ஆணையாளரின் அனுதாபச்செய்தியை வெளியிட்ட அவர், பெரும்வேதனையை அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த உயிரிழப்புகள் ஆள்கடத்தல்காரர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டிய அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
குடியேற்றவாசிகள் பயணம் செய்வதற்கான வழிகளை திறக்கவேண்டும்,பொறுப்பை பகிரவேண்டும்,கடலில் மீட்கப்பட்ட அனைத்து மக்களும் பாதுகாப்பாக இறங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் எனவும் மனித உரிமை ஆணையாளரின் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிரேக்கத்தின் தென்பகுதியில் குடியேற்றவாசிகளுடன் மூழ்கிய படகில் 100 சிறுவர்கள் பயணித்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
78பேர் உயிரிழந்துள்ளமை இதுவரை உறுதியாகியுள்ளது.750 பேர்வரை குறிப்பிட்ட மீன்பிடிபடகில் பயணித்தனர் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.
ஆள்கடத்தல் குற்றச்சாட்டில் பல எகிப்தியர்கள் உட்பட 9 பேர் கைதுசெய்ய்பபட்டுள்ளனர்.ஆபத்தினை தடுக்க முயலவில்லை என கிரேக்க கடலோரகாவல்படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன – எனினும் உதவிகள் மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகுகவிழ்ந்த பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
எகிப்திலிருந்து ஆட்கள் இன்றி புறப்பட்டபடகு லிபியாவின் டொபுருக் துறைமுகத்திலிருந்து குடியேற்றவாசிகளை ஏற்றியுள்ளது – இந்த குடியேற்றவாசிகள் இத்தாலிக்கு நோக்கி பயணித்துள்ளனர்.
படகில் பெருமளவு பெண்கள் சிறுவர்கள் காணப்பட்டமை குறித்த விபரங்களை உயிர்தப்பியவர்களிற்கு சிகிச்சைஅளித்த வைத்தியர்கள் வெளியிட்டுள்ளனர்.
படகில்100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காணப்பட்டனர் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் படகின் உட்பகுதியில் காணப்பட்டனர் என தெரிவித்த உயிர்தப்பியவர்களில் இருவர் சிறுவர்களின் எண்ணிக்கையை தெரிவித்துள்ளனர். ஒருவர் 100 பேர் என தெரிவித்தார் மற்றையவர் 50 பேர் என தெரிவித்தார் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை என வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 600 பேர் உயிரிழந்திருக்கலாம் என தான் கருதுவதாக வைத்தியர் மகாரிஸ் தெரிவித்துள்ளார்- படகிலிருந்தவர்களின் எண்ணிக்கை 750 எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்- அனைவரும் இந்த எண்ணிக்கையையே தெரிவித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.