முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரெஜினோல்ட் குரே மரணிக்கவில்லை. அவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். இதனை தெரிவிப்பதற்கு தான் அச்சப்படப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (23.06.23) இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லரின் பெரேரா, ரெஜினோல்ட் குரே, புத்திக குருகுலரத்ன மற்றும் முத்து சிவலிங்கம் ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்த சிறந்த தலைவர். அவர் சிறந்த அறிவார்ந்தவர். அனைவருடன் அன்பாக பழகக்கூடியவர். அதனால் அவரை தான் வடக்கு ஆளுநராகவும் பின்னர் மாணிக்ககல் கூட்டுத்தாபன தலைவராகவும் நியமித்ததாகவும், அதேபோன்று அவர் அரசியல் துறையில் அமைச்சு பதவி உட்பட பல்வேறு பதவிகளை வகித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரெஜினோல்ட் குரே மரணித்தார் என தான் நம்பப் போவதில்லை எனவும், அவர் தனது உயிரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக அர்ப்பணித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரின் மரணம் தொடர்பில் தான் அறிந்த மட்டில் விசாரணை ஒன்று இடம்பெறவில்லை. என்றாலும் ஒருவகையில் அது கொலை. அவர் மரணித்தார் என்பதைவிட அவரை கொலைசெய்தார்கள் என தெரிவிப்பதற்கு தான் அச்சப்படப்போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கூறியுள்ளார்.