கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு சென்னை மீனவர்கள் நலன் சங்கம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே தலைமை நீதிபதி இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1974-இல் இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.எனினும் குறித்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளதாக செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், நடுக்கடலில் இந்திய மீனவர்களுக்கு அநீதிகள் இழைக்கப்படுவதாக தெரிவித்து, சென்னை மீனவர்கள் நல சங்கத்தை சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பிரச்சினைக்கு தீர்வாக 1974 ஆம் ஆண்டின் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை இரத்து செய்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்தியா- இலங்கைக்கு இடையிலான 1974 ஆம் ஆண்டின் கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என நீதிபதிகள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.