அரசியல் தீர்வு , அதிகார பரவலாக்கம் குறித்து தமிழ் அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகக் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , வடக்கு மாத்திரமின்றி ஏனைய மாகாணசபைகளும் உள்ளடங்களாக மேலதிக அதிகார பரவலாக்கம் குறித்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் .
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு பிரான்ஸ் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்,
“உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடரிலும் இவ் ஆணைக்குழுவின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பில் தென் ஆபிரிக்காவின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் இன்றும் அந்நாட்டு ஜனாதிபதி ரமபோஷாவுடன் கலந்துரையாடியுள்ளேன். அத்தோடு இதற்கான செயலகமொன்றை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் அந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஓகஸ்டில் இந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.”
இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கின்றனர். பொருளாதார ரீதியிலும் , சமூக ரீதியிலும் அம்மக்களுக்கான தேவைகள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படுகின்றன.
குறிப்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் அரசியல் தீர்வு குறித்தும் , அதிகார பரவலாக்கம் குறித்தும் கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். எவ்வாறாயினும் ஏற்கனவே நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் மாகாணசபைக்கு குறிப்பிட்டளவு அதிகாரபகிர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தலைவர் மேலும் சில அதிகாரங்களைக் கோருகின்றனர். எவ்வாறிருப்பினும் வட மாகாணசபைக்கு மாத்திரமல்லாது நாட்டிலுள்ள ஏனைய மாகாணசபைகளும் உள்ளடங்களாக மேலதிக அதிகார பரவலாக்கம் குறித்தும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.