யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் கட்டண மீட்டர் பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில், மாவட்ட செயலர் , முச்சக்கர வண்டி சங்கத்தினர், மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக கட்டண மீட்டர்களை பொருத்த வேண்டுமென அறிவுறுத்த ப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 16ஆம் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகள் ஆகிய மூன்று நாட்களிலும் கட்டண மீட்டர்கள் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு காவல்துறையினாினால் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். எனவே யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு கட்டண மீட்டர்களை பொருத்தி, காவல்துறையினரின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டே சேவையில் ஈடுபட முடியும்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து குறித்த நடவடிக்கைகளை பின்பற்றாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட முடியாது. முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்துவோர் பாதிப்பிற்குள்ளாகாது பணத்தினை செலுத்துவதற்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கட்டணத்தினை அறவீடு செய்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.