நான்காவது நாளாக நீடிக்கும் வன்முறை தொடர்பாக இதுவரை 2,300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைநகரில் இரவு நேரங்களில் டிராம் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாரிஸ் நகர வீதிகள் போர்க்களத்தைப் போன்று காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நஹெல் என்ற சிறுவன் அல்ஜீரியாவை பூர்வீகமாகக் கொண்டவர். பிரான்சில் வெடித்த வன்முறை அண்டை நாடான பெல்ஜியத்திற்கும் பரவியுள்ளது. அங்கும் வன்முறையை தூண்டுவதாக பலரையும் காவற்துறையினர் கைது செய்து வருகின்றனர். தலைநகர் பிரஸ்ஸல்சில் மட்டும் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்சுக்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் என பிரிட்டன் தனது குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. நான்காவது நாளில் வன்முறை சற்று குறைந்திருப்பதாகவும், 471 பேரை கைது செய்திருப்பதாகவும் பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மானின் கூறியுள்ளார். முதல் 3 நாள் வன்முறையில் 917 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிகளை திருடிய கலவரக்காரர்கள்.
மெர்செய்ல் நகரில் நேற்றிரவு துப்பாக்கி விற்பனையகத்திற்குள் புகுந்த கலவரக்காரர்கள் துப்பாக்கிகளை திருடிச் சென்றுவிட்டதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
30 இளைஞர்கள் துப்பாக்கி விற்பனையகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து 5 முதல் 8 வரையிலான துப்பாக்கிகளை திருடிச் சென்றுவிட்டதாக லி பாரிசியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், வெடிமருந்துகள் ஏதும் திருடு போகவில்லை என்று பிரான்ஸ் 3 ஊடகம் கூறியுள்ளது.
ரோன் பிராந்தியத்தில் 3 காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுடப்பட்டதாக பிரெஞ்சு ஊடகங்கள் கூறியுள்ளன. சுவருக்கு பின்னால் பதுங்கியிருந்த நபரை நெருங்கிய போது அவர்கள் மூவரையும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாக பிரெஞ்சு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரிஸ் புறநகரில் சிறுவனுக்கு இறுதிச்சடங்கு
காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது சிறுவன் நஹெலுக்கு பாரிசின் புறநகர்ப் பகுதியான நான்டெர்ரேவில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. சிறுவனின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திரளானோர் அந்த நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளதாக லீ மான்டே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறுவனின் இறுதிச்சடங்கு முடிந்த பின்னரும் அங்குள்ள மசூதிக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், ‘நஹெல் மறைவுக்கு நீதி வேண்டும்’ என்று முழக்கங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
பிரான்ஸ் முழுவதும் நிகழ்ச்சிகள் ரத்து
பிரான்சில் 4 நாட்களாக நீடிக்கும் வன்முறை எதிரொலியாக, அந்நாடெங்கும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்கிள் யாவும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் மிகப்பெரிய நிகழ்வு, பாரிசில் புகழ் பெற்ற பிரெஞ்சு பாடகர் மிலென் ஃபார்மரின் இசைக் கச்சேரியாகும்.
வெர்செய்ல்ஸ், பாரிஸ், கிரெடெய்ல் ஆகிய கல்வி மாவட்டங்களில் ஆண்டிறுதி கொண்டாட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிலவற்றில் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
23 ஆண்டுகளில் முதன் முறையாக ஜனாதிபதியின் பயணம் ரத்து
பிரான்சில் கடந்த 23 ஆண்டுகளில் முதன் முறையாக அதிபர் ஒருவர் அரசுமுறைப் பயணமாக வெளிநாடு செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதனை அடுத்து நாடெங்கும் பரவியுள்ள வன்முறை எதிரொலியாக ஜெர்மனிக்கு பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. “ஜெர்மனின் அதிபர் ஃப்ராங்க் – வால்டர் ஸ்டெய்ன்மியரிடம் பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் தொலைபேசி வாயிலாக பேசினார். பிரான்ஸ் நிலவரம் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். அத்துடன், ஜெர்மனியில் திட்டமிடப்பட்டிருந்த தனது அரசுமுறைப் பயணத்தை பிற்போடுவதாகவும் அவர் கேட்டுக் கொண்டார். பிரெஞ்சு ஜனாதிபதியின் ஜெர்மனி பயணம் ரத்தாவது வருத்தம் அளிக்கிறது. ஆனால், அண்டை நாட்டின் நிலவரத்தை முழுவதுமாக புரிந்து கொண்டுள்ளோம்” என ஜெர்மனி அதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BBC