444
மன்னார் மருத மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று (2) ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணி அளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயர் அருட்திரு அன்ரன் ரஞ்சித் ஆண்டகை இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.
கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி கொடி யேற்றத்தினைத் தொடர்ந்து நவநாள் ஆராதனை திருப்பலிகள் இடம் பெற்று நேற்று சனிக்கிழமை (1) மாலை வேஸ்பர்ஸ் ஆராதனை இடம் பெற்றது. திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் ஆசீர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதேவேளை 1924 ஆம் ஆண்டு மருதமடு திருப்பதியிலே பல ஆயர்கள் சூழ மருதமடு அன்னைக்கு முடிசூட்டு விழா இடம்பெற்றது. குறித்த முடிசூட்டு விழாவின் நூற்றாண்டு நிறைவு யூபிலி பெருவிழாவாக எதிர்வரும் வருடம்(2024) ஆண்டு ஜூலை மாதம் கொண்டாடப்படவுள்ளது.
அதனை முன்னிட்டு இன்றைய தினம் (ஜூலை மாதம் 2ஆம் திகதி) திருவிழாவின் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் யூபிலி நூற்றாண்டு விழாவினை பிரகடனம் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மருதமடு அன்னையின் திருச் சொரூபத்தின் பின் விசேட விதமாக யூபிலி ஆண்டை பிரகடனப் படுத்துவதோடு,அதனை வெளிப்படுத்தும் முகமாக வருடம் முழுவதும் பறக்க விடப்படுகின்ற யூபிலி கொடி மருதமடு ஆலய முன் மண்டபத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.
Spread the love