Home இலங்கை அணில் கட்டிய பாலமும் ரணில் கட்டாத பாலமும் ? நிலாந்தன்!

அணில் கட்டிய பாலமும் ரணில் கட்டாத பாலமும் ? நிலாந்தன்!

by admin

ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன.ஏற்கனவே பலாலியிலிருந்து மீனம்பாக்கத்திற்கும்,காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டுக்கும், மன்னாரியிலிருந்து தமிழ்நாட்டுக்கும் என மூன்று திட்டங்கள் யோசிக்கப்பட்டன.இந்தக் கடல் வழிப்பிணைப்பு,வான்வழிப் பிணைப்பு, என்பவற்றோடு,தரை வழியாக ஒரு பாலத்தை கட்டுவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.இவைதவிர ரணிலின் விஜயத்தின் பின்னணியில் இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்த கருத்துக்களின்படி கடல் வழி, வான்வழி, தரைவழிப் பிணைப்புகளோடு வர்த்தகப் பிணைப்பு, எரிசக்திப் பிணைப்பு, பொருளாதாரப் பிணைப்பு,டிஜிட்டல் பிணைப்பு,மின்சக்திப் பிணைப்பு, எரிபொருள் வினியோக குழாய்வழிப் பிணைப்பு என்றிவ்வாறாக பல்வேறு வகைப்பட்ட பிணைப்புகளைக் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான புவியியல் அருகாமை காரணமாக ஏற்கனவே இருநாட்டு மக்கள் கூட்டங்களுக்கும் இடையே கலாச்சார பிணைப்புகளும் மதம் சார்ந்த பிணைப்புகளும் உண்டு. ஒரு இந்திய ராஜதந்திரி தனிப்பட்ட உரையாடலின் போது சொன்னார், இப்புவியியல் அருகாமையும் அது சார்ந்த பிணைப்பும் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் பொருந்தும் என்று. உண்மை. இப்பொழுது மிலிந்த மொரகொட அதைத்தான் புதுப்பிக்க முயற்சிக்கின்றார்.அதாவது வட இந்தியாவுக்கும் பௌத்தத்துக்கும் இடையிலான பிணைப்பைக் கையாண்டு அவர் சிங்கள மக்களை பாரதிய ஜனதாவோடு சென்ரிமென்ரலாகப் பிணைக்க முயற்சிக்கின்றார்.
ஆனால் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் இடையிலான பிணைப்பு ஆழமானது;பரந்தகன்ற பரிமாணங்களைக் கொண்டது. ஈழத் தமிழர்களையும் தமிழகத்தையும் பிரிப்பது ஒடுங்கிய பாக்கு நீரிணையாகும்.பாக்கு நீரினையை அதன் பிரயோக வடிவத்தில் சொன்னால் அது ஒரு தமிழ் நீரிணைதான். அல்லது தமிழ் வாவிதான். அந்த நீரிணையின் இருபுறமும் தமிழர்கள் உண்டு. நவீன அரசியலின் சர்வதேச எல்லைகளால் பிரிக்கப்படுவதற்கு முன்பு,அது ஒரு தமிழ்க் கடலாகத்தான் காணப்பட்டது.ஈழப்போரின் போதும் அது அவ்வாறுதான் காணப்பட்டது. ஈழப்போரின் பலம் அதுதான் என்று மு.திருநாவுக்கரசு கூறுவார். இவ்வாறு ஒடுங்கலான தமிழ் நீரிணையால் பிரிக்கப்பட்ட இரு வேறு தமிழ்ச் சமூகங்களுக்கும் இடையிலான பிணைப்பு எனப்படுவது சிங்கள மக்களுக்கும் வட இந்தியாவுக்கும் இடையிலான பௌத்த பண்பாட்டுப் பிணைப்பை விடவும் ஆழமானது;உடனடியானது;வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தியது.
இப்பிணைப்புக் காரணமாகத்தான் ஈழப்போர் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியை அடைந்தது.அதுமட்டுமல்ல தமிழகத்தில் மொத்தம் 19 பேர் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்திருக்கிறார்கள்.இவர்களில் யாருமே திருகோணமலையில் இருக்கும் எண்ணெய் குதங்களுக்காகவோ அல்லது பலாலி விமான நிலையத்தை திற என்று கூறியோ அல்லது காங்கேசன் துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் கப்பலை விடு என்று கேட்டோ அல்லது கலாச்சார மண்டபம் ஒன்றை கட்டிக் கொடு என்று கேட்டோ அவர்கள் தீக்குளிக்கவில்லை. தமிழர்களுக்கு ஒன்று என்றதும் அவர்கள் தீக்குளித்தார்கள். ஈழத் தமிழர்கள் அந்த 19 பேரின் சாம்பலையும் கடந்து சென்று அதாவது தமிழகத்தைக் கடந்து சென்று அரசியல் செய்வது கடினம்.
இவ்வாறாக,ஈழத் தமிழர்களுக்கு தமிழகத்தோடு உள்ள ராஜதந்திர நலன்கள் கலக்காத பிணைப்பை, இந்தியா தனது புவிசார் அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தியது.அதன் விளைவாக ஈழப் போர் வளர்ந்தது. பின்னர் இந்தியா அதே புவிசார் நலன்களின் அடிப்படையில் இந்திய-இலங்கை உடன்படிக்கையைச் செய்தபொழுது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் கசந்தன.விளைவாக துரோணர்களுக்கும் அர்ச்சுனர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. ஈழப் போர் தமிழகத்திற்கும் விரிவடைந்தது.
அது பழைய கதை.புதிய கதை என்னவென்றால்,ஈழப்போரின் இறுதிக்கட்டத்தின் பின் தமிழகத்துக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளிகள் முன்னப்பொழுதையும் விட அதிகரித்துள்ளன என்பதுதான். குறிப்பாக திராவிட கட்சிகளுக்கும் ஈழச் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே இடைவெளிகள் அதிகமாகி வருகின்றன.சமூக வலைத்தளங்களில் நடக்கும் வாதப்பிரதிவாதங்கள் அதைக் காட்டுகின்றன.மிகக்குறிப்பாக “நாம் தமிழர்” கட்சியின் எழுச்சியோடு தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் ஈழத் தமிழர் விவகாரத்தில் இருந்து சற்று ஒதுங்கி நிற்கும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது. மேலும் பாரதிய ஜனதாவின் தமிழக அமைப்பாளர் தனது உள்நாட்டு அரசியல் தேவைகளுக்காக ஈழப் போராட்டத்தை திராவிட கட்சிகளிடமிருந்து ஹைஜாக் பண்ண முற்படும் ஒரு நிலைமையும் வளர்ந்து வருகிறது.இதில் கடந்த வாரம் ரணில்-மோடி சந்திப்பையொட்டி தமிழக முதல்வர் டெல்லிக்குக் கடிதம் எழுதியது ஒரு மாற்றம்.
அதாவது 2009க்கு முன்னைய நிலைமைகளோடு ஒப்பிடுகையில் இப்பொழுது தமிழகத்துக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவுகள் ஒப்பீட்டளவில் சோதனைக்கு உள்ளாகி வருகின்றன.புவியியல் அருகாமை,இன அருகாமை,மொழி அருகாமை, பண்பாட்டு அருகாமை,மத அருகாமை போன்ற அருகாமைகள் காரணமாக பிணைக்கப்பட்டிருந்த மக்கள்,அரசியல் காரணங்களால் படிப்படியாகத் தூரமாகிச் செல்லும் ஒரு பின்னணியில், பாக்குநீரிணையின் இருபுறங்களிலும் காணப்படும் தமிழ்ச் சமூகங்களுக்கிடையிலான பிணைப்பைப் பலப்படுத்தக்கூடிய சில திட்டங்களை இந்தியா முன்வைத்தது. அத்திட்டங்களை புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பான பி.ரி.எப்.ஊக்குவித்தது. பலாலியில் இருந்து ஒரு வான் வழியையும் காங்கேசன்துறையில் இருந்தும்,மன்னாரில் இருந்தும் இரண்டு கடல் வழிகளையுந் திறப்பது மேற்படி பிணைப்புத் திட்டங்களின் நோக்கம். யாழ்ப்பாணத்தில் இந்திய நிதி உதவியோடு கட்டப்பட்டுள்ள கலாச்சார மண்டபமும் அதற்குள் அடங்கும்.
ஆனால் இலங்கை அரசாங்கம் இத்திட்டங்கள் அவற்றின் முழு வளர்ச்சி அடைவதை ஏதோ ஒரு விதத்தில் தடுத்து வருகின்றது.பலாலி விமான நிலையத்தை ஒரு சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்துவதற்கு அதன் ஓடு பாதையைப் பெரிதாக்க வேண்டும்.அதற்கு இலங்கை அரசாங்கம் இன்றுவரை அனுமதிக்கவில்லை.சில “டியூற்றி பிறீ” மதுக்கடைகளைத் திறப்பதன்மூலம் பலாலியை சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்திவிட முடியுமா? காங்கேசன் துறைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான கடல் வழி இன்றுவரை திறக்கப்படவில்லை.அது இதோ திறக்கப்படுகிறது என்று எத்தனை தடவைகள் கூறப்பட்டுவிட்டது?மன்னாரிலும் அப்படித்தான்.ஏன் அதிகம் போவான்?தமிழ் மக்களுக்கு என்று இந்தியா யாழ்ப்பாணத்தில் கட்டிக் கொடுத்த கலாச்சார மண்டபத்தை இன்றுவரை முழுமையாக இயங்க வைக்க முடியவில்லை.அதற்கு வேண்டிய நிர்வாகக் கட்டமைப்பையும் உருவாக்க முடியவில்லை.அக்கட்டடத்தை தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட மாநகர சபையிடம் கொடுப்பதா ? அல்லது மத்திய அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பதா என்று முடிவெடுக்கப்பட்டு விட்டதா?
இப்படிப்பட்டதோர் பின்னணியில்,இப்பொழுது மேலும் புதிய பிணைப்புத் திட்டங்கள் பற்றிச் சிந்திக்கப்படுகிறது.குறிப்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரை வழியைத் திறக்கும் நோக்கத்தோடு ஒரு பாலத்தைக் கட்டுவது பற்றிய முன்மொழிவை ரணில் விக்ரமசிங்க டெல்லியில் முன்வைத்திருக்கிறார்.அவர் ஏற்கனவே இதுபோன்ற ஒரு முன்மொழிவை 2002-2004வரை பிரதமராக இருந்தபோது இந்தியாவிடம் முன்வைத்திருக்கிறார்.இவ்வாறு இலங்கையை இந்தியாவோடு ஒரு பாலத்தின் மூலம் இணைக்கும் திட்டத்திற்கு அவர் தாமாக முன்வந்து வாய்ப்பை வழங்கியதன்மூலம் இந்திய அரசாங்கத்தை ஏதோ ஒரு விதத்தில் வெற்றிகரமாகக் கையாள முயற்சிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ள இச்சிறிய தீவை ஒரு பாலத்தின் மூலம் இந்தியாவோடு தொடுத்து விடலாம் என்று அவர் கேட்டுக் கொண்டதன்மூலம் இந்தியாவின் பாதுகாப்புசார் கவலைகளை நீக்க முயற்சிக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். “உங்களோடு எங்களைப் பிணைத்துக் கொள்ளும் ஒரு பாலத்தைக் கட்ட நான் தயார் ” என்ற செய்தியை அவர் இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறார்.அதன்மூலம் இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவிலிருந்து வரக்கூடிய அழுத்தங்களை அவர் தவிர்த்திருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஆனால் நிச்சயமாக அப்படி ஒரு பாலத்தை அவர் கட்டப்போவதில்லை. அப்படிக் கட்டுவதற்கு சிங்களபௌத்த கூட்டுஉளவியல் அனுமதிக்காது.அப்பாலம் கட்டப்பட்டால் இச்சிறிய தீவு இந்தியாவின் மாநிலமாகிவிடும் என்ற அச்சம் சிங்கள பௌத்தர்களுக்கு உண்டு.அப்பாலத்தைக் கட்ட முற்பட்டால் 13-ஐ எதிர்ப்பது போல பிக்குகளும் அரசியல்வாதிகளும் எதிர்ப்பார்கள். அப்பொழுது எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை,பிக்குகள் எதிர்க்கிறார்கள் என்று சொல்லி ரணில் கையை விரிப்பார்.எனவே அதில் அவர் விசுவாசமாக இல்லை. இப்போதைக்கு மோடியை எப்படி வசப்படுத்துவது என்றுதான் அவர் சிந்திக்கிறார்.
தமிழ் நோக்குநிலையில், பாக்கு நீரிணையின் இரு புறங்களிலும் உள்ள இரண்டு தமிழ் சமூகங்களுக்கும் இடையிலான பிணைப்பைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்க,ரணில் விக்கிரமசிங்க,அரசுக்கும் அரசுக்கும் இடையிலான பிணைப்புத் திட்டங்களுக்குரிய யோசனைகளை முன்வைத்திருக்கிறார். அதாவது, சிங்களத் தீவுக்கு ஒரு பாலம் அமைக்கலாம் என்று தாமாக முன்வைத்து ஒரு முன்மொழிவை கொடுத்திருக்கிறாரா? அண்ணாமலையை லண்டனுக்கு அழைத்து உறவுப் பாலம் அமைப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் முயற்சிக்க,ரணில்,”சிங்களத் தீவினுக்கோர் பாலம்” அமைக்க முன்வந்திருக்கிறாரா?
அல்லது இந்துத்துவாவை ஒரு கொழுக்கியாக பயன்படுத்தி பாரதிய ஜனதா அரசாங்கத்தை நெருங்கிச் செல்லலாம் என்று நம்பும் ஒரு பகுதி ஈழத் தமிழர்கள் அதற்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்க, ரணில் விக்கிரமசிங்க புதிய பிணைப்பு திட்டங்களின் மூலம் இந்தியாவை நெருங்கிச் சென்று இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியா தன் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியாதபடி நிலைமைகளை வெற்றிகரமாகக் கையாள முயற்சிக்கிறாரா?

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More