இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புதிய பொருளாதார ஒத்துழைப்பிற்கான கடல்சார், எரிசக்தி மற்றும் நிதி இணைப்புகள் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நகர்வாக அமையும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒருங்கிணைப்பு ஏற்பட்டவுடன், அதில் வேறு எவருக்கும் சந்தரப்பம் இருக்கும் என தாம் கருதவில்லை எனவும் இலங்கை உயர்ஸ்தானிகர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாக Hindustan Times செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களுக்கான முதலீடுகளில் தனியார் துறைக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் யோசனை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்திய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்தும் இலங்கை உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், பிரதான வைத்தியசாலை மற்றும் ஹில்டன் ஹோட்டல் ஆகியவற்றை மறுசீரமைக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களும் இந்தியாவின் தனியார் துறைக்கான வாய்ப்புகளை வழங்குவதாக Hindustan Times வௌியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளினதும் மின்சார கட்டமைப்புகளை கடலுக்கு அடியில் இணைப்பதற்கான மிகவும் சிக்கனமான மற்றும் சிறந்த வழியைத் தீர்மானிப்பது தொடர்பிலான தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
நில இணைப்பு முன்மொழிவில் ஒரு சாத்தியக்கூறு ஆய்வு, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் இருந்தாலும் வீதி அமைப்பு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி அதனை சாத்தியப்படுத்தும் என அவர் மேலும் கூறியுள்ளார்.