336
யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரண்டு உணவகங்கள் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரியின் கீழான பொது சுகாதார பரிசோதகர்களால் யாழ்.நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள உணவகங்கள் திடீர் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
அதன் போது யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றும் , பண்ணை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டு , பொது சுகாதார பரிசோதகரால் , யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , பொது சுகாதார பரிசோதகரால் முன் வைக்கப்பட்ட சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களுக்கு சீல் வைக்குமாறு கட்டளை இட்ட மேலதிக நீதவான் , இரு உரிமையாளர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்து வழக்கினை எதிர்வரும் 10ஆம் மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Spread the love