அழகான உலகில் மகிழ்வான வாழ்விற்கான பாடல்
உலகமெல்லாம் கொள்ளை அழகு
குவிந்து கிடக்குது
உள்ளம் உவகை கொள்ளும் வனப்பு
மிகுந்து கிடக்குது
அள்ள அள்ளக் குறையாத
வளங்கள் இருக்கிது
அனைத்துயிரும் வாழ்ந்து மகிழ
வழிகள் இருக்கிது
அதை நடத்தி முடிக்கும் அறிவு ஆற்றல்
நிறைந்து கிடக்கிது
அதற்குத் தடைகள் எங்கெங்கும்
மலிந்து கிடக்கிது
நிலைமை விளங்கும் அறிவு எங்கும்
ஒளிகொள்ள வேண்டும்
உண்மை மறைக்கும் திரைகள் எல்லாம்
விலக்கிட வேண்டும்
உயர்வு தாழ்வு அற்ற உலகம்
இருந்திட வேண்டும்
உலக உயிர்கள் எல்லாம் நல்லாய்
வாழ்ந்திட வேண்டும்
- சி.ஜெயசங்கர் –
இயல்பான இயற்கையில் வாழ்ந்து மகிழுவோம்
இயல்பாக இயற்கையை வாழவிடுவோம் – அது
அள்ளித்தரும் வளங்களில் வாழ்ந்து மகிழுவோம்
மற்றெல்லா உயிர்களிலும் மேலானவர்கள் – மனிதர்
என்ற அறிவு பொருத்தமில்லை ஏற்றுக்கொள்ளுவோம்
சிறுபூண்டும் பெருமரமும் உணவு அறிகுவோம்
நோய்நீங்கி வாழ அவை மருந்தும் ஆகுமே
சிற்றெறும்பு தொல்லையென்று துணுக்குறுகின்றோம் – அது
இல்லையென்றால் மனிதர்களும் இல்லை அறிகுவோம்
எவ்வுயிரும் உலகம் வாழ தேவை அறிகுவோம்
மனிதர் மட்டும் வாழும் உலகம் மரணம் ஆகுமே
உயிரைக் கொல்லும் நச்சு அறிவை உயர்த்திப் பிடிக்கின்றோம்
உலகம் வாழும் இயற்கை அறிவைப் போட்டு மிதிக்கின்றோம்
கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் கதையிதுதானோ
காசை மட்டும் கருத்தில் கொண்ட வாழ்வு போதுமோ
இயல்பாக இயற்கையை வாழவிடுவோம் – அது
அள்ளித்தரும் வளங்களில் வாழ்ந்து மகிழுவோம்.
சி.ஜெயசங்கர்.