429
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்ட நபர் , 09 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் , அதனால் மாணவியின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கல்வியங்காடு விளையாட்டரங்க வீதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை மகேந்திரன் (வயது 54) என்பவர் கடந்த சனிக்கிழமை அவரது வீட்டில் இருந்து நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , கொலையான நபர் முச்சக்கர வண்டியில் 09 வயதான பாடசாலை மாணவியை பாடசாலைக்கு ஏற்றி , இறக்கி வந்துள்ளார்.
அந்நிலையில் மாணவியுடன் தவறான நடத்தையில் ஈடுபட முயற்சித்த வேளை , மாணவி அது குறித்து தனது தாயாருக்கு தெரியப்படுத்தி உள்ளார். தாயார் அது குறித்து வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியில் வசிக்கும் தனது சகோதரனுக்கு தெரியபப்டுத்தியுள்ளார். அவர் , கோப்பாய் வந்து , தனது மருமகளுடன் தவறாக நடந்து கொள்ள முற்பட்ட முச்சக்கர வண்டி சாரதியை சித்தங்கேணிக்கு அழைத்து சென்று கடுமையான விசாரணைக்கு உட்படுத்தி தாக்கியுள்ளனர்.
பின்னர் அவரை கோப்பாய் வீட்டுக்கு கொண்டு சென்று போட்டுள்ளனர் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து , சிறுமியின் தாய் மற்றும் பெரியதாய் உள்ளிட்ட இரு பெண்களும் நான்கு ஆண்களையும் கோப்பாய் காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை பாதிக்கப்பட்ட 09 வயது சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறையினர், கொலையானவரின் மரணத்திற்கு காரணம் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையின் மூலமே தெரிந்து கொள்ள முடியும் என காவல்துறையினர் தெரிவித்தனர்
Spread the love