390
ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால், நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை, மயிலிட்டி பகுதியை சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட நிலையில் , முகவர் ஒருவர் ஊடாக ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுள்ளார். அது தொடர்பில் தகவல் அறிந்த புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த இரு மாத கால பகுதியில் போலி சாரதி அனுமதி பத்திரம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுமார் 10 வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட போக்குவரத்து திணைக்களத்திற்கு அருகில் நடமாடும் முகவர்கள் , சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான பரீட்சையி ல் சித்தியடைய தவறுவோர் , மருத்துவ பரிசோதனையில் சிக்கலை எதிர்கொள்வோர் ஆகியோரை இலக்கு வைத்து அவர்களை நாடி பெருமளவான பணத்தினை பெற்றுக்கொண்டு, சாரதி அனுமதி பத்திரத்தை மோட்டார் திணைக்களத்தில் பெற்று தவறுவதாக கூறி , போலி சாரதி அனுமதி பத்திரங்களை வழங்கி வருகின்றனர்.
இது தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் சுமார் 2 மாத காலமாக தொடர் விசாரணைகளை முன்னெடுத்து , போலி சாரதி அனுமதி பத்திரங்களை வைத்திருப்போரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love