முருகன் அழகன் குமரன் இளைஞன்
மூத்தோன் குமாரத்தன்
தொல்குடிகள் தொழுது வாழும்
பெரியோன் குமாரத்தன்
வள்ளி முருகன் கதைகள்தாம்
எங்கும் நிறைந்ததாகுமே – அதில்
பழங்குடிகள் வேடரின்
வாழ்வும் இணைந்ததாகுமே
தொன்மை வடிவம் தொலைத்துவிட்டு
தோள்விரித்துத் திரிகின்றோம்
தமிழும் அழகும் அழித்துவிட்டு
திரிபுகளைத் தொழுகின்றோம்
காத்துவந்த முன்னோர்களில்
நம்பிக்கையை இழக்கின்றோம்
கிளப்பிவிட்ட புரளிகளால்
பேய்களென்று மிரளுகின்றோம்
தமிழ்மொழியை புரியும் கடவுள்
எங்கோ மறைந்து போயினர்
தாய்மொழியைப் புரியாக் கடவுள்
எழுந்தருளி இருக்கின்றனர்
மொழிபெயர்க்க வரிந்துக்கட்டி
இடையில் ஒருவர் நிற்கிறார்
தொடமுடியாதென்று சொல்லி
தூரவிலத்தி வைக்கிறார்
இழிவுவாழ்வில் இணைந்து நாங்கள்
இன்பசுகம் காண்கின்றோம் – இந்த
வாழ்வு பெரிது என்று
இறுமாந்து(ம்) நிற்கின்றோம்
சி.ஜெயசங்கர்