களரியேற்றம்
காலம் :- 24.08.2023 (வியாழக்கிழமை)
நேரம் :- பி.க – 6.30 மணி
கர்ணன் போர் வடமோடி கூத்து அரங்கேற்றம்
வாகரைப் பிரதேசத்தில் சிறப்பு வாய்ந்த கிராமங்களில் ஒன்றாக வம்மிவட்டவான் காணப்படுகின்றது. இக்கிராமத்தில் நிறைந்து கிடக்கும் வளங்களின் சிறப்பினை செழித்தோங்கி நிற்கும் மக்களின் வாழ்வியல் பறைசாற்றுகின்றது.
பல்வேறு உள்ளூர் கலை பாரம்பரியத்தினைக் கொண்ட ஒரு தனித்துவமான கிராமமாக வம்மிவட்டவான் கிராமம் காணப்படுகின்றது. இதற்கு இன்றும் மண்மனம் மாறாமல் பயிலப்பட்டு வரும் பாரம்பரிய கலைகள் சான்றாகின்றன. இதில் வம்மிவட்டவான் கிராம கூத்துக்களுக்கு தனிச் சிறப்புண்டு.
இக்கிராமத்தில் ஆரம்ப காலத்தில் பல்வேறு கூத்துக்கள் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் நாட்டில் ஏற்ப்பட்ட அசாதாரன சூழ்நிலை காரணமாக (கொரோனா தொற்று நோய், பொருளாதாரப் பிரச்சினைகள்) இக் கூத்துக்கலையினை கடந்த 6 வருடங்களாக முன்னெடுக்க முடியாத நிலைமை இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனால் இக்கிராமத்தில் சிறப்புக்குரிய கலை வடிவமாக காணப்படும் பாரம்பரிய கூத்து கலையானது மருவிச் செல்வதினை விரும்பாத இக்கிராமத்தின் பெரியவர்கள், கூத்துக் கலைஞர்கள், கூத்து ஆர்வலர்கள், இளைஞர்கள், கிராம மக்கள் அனைவரின் இணைவினால் “கர்ணன் போர்” எனும் வடமோடி கூத்தினை 24.08.2023 ( வியாழக்கிழமை) அன்று அரங்கேற்றவுள்ளோம்.
வம்மிவட்டவான் கிராமத்தில் வசித்துவரும் தலைசிறந்த அண்ணாவியரான திரு. இ.நாகரெட்ணம் என்பவரினால் பழக்கப்பட்டு, கூத்துக் கலைஞர்களின் அயராத முயற்சியினாலும் உழைப்பினாலும் வம்மிவட்டவான் கிராம அபிவிருத்தி சங்கம், மற்றும் வம்மிவட்டவான் வான்மதி விளையாட்டு கழகத்தின் ஒழுங்கமைப்பில் இடைநிறுத்தப்பட்ட கூத்துக் கலை மீண்டும் களரி காணயிருப்பது மிகுந்த சந்தோசமளிக்கின்றது.
நீண்ட இடைவெளியின் பின் அரங்கேற காத்திருக்கும் “கர்ணன் போர்” வடமோடி கூத்து சமூகத்தின் கூட்டு செயற்பாடாகவும், சமூகம் செயற்பட்டு மகிழும் நிகழ்விடமாகவும் பாரம்பரியங்களின் தலைமுறைக் கையளிப்பாக அமையும் என்பது அனைவரினதும் நம்பிக்கை ஆகும். ஒரு ஆற்றுகையின் வெற்றி பார்வையாளர்களிலேயே தங்கியுள்ளது. அந்தவகையில் உங்கள் வருகை கலைஞர்களை உற்சாகப்படுத்தும், மகிழ்விக்கும் இந்த மகிழ்வின் தேடலுக்காக உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி..