மூளையில் ஏற்படுகின்ற இரத்தக் கசிவுகளுக்கு என்டோவஸ்குலர் அனூரிசம் கொய்லிங் என்ற நவீன சிசிச்சை முறை இதுவரை காலமும் இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையை அடுத்து அரச மருத்துவமனை என்ற வகையில் இரண்டாவதாக யாழ். போதனா மருத்துவமனையில் இந்த நவீன சிகிச்சைமுறை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும்.
அண்மையில் 2023.08.10 அன்று யாழ். போதனா மருத்துவமனையின் இடையீட்டு கதிரியக்கவியல் மருத்துவ நிபுணர்கள் (Interventional Radiologists), உணர்வழியியல் சிகிச்சை நிபுணர்கள் (Anaesthesiologist) மற்றும் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் (Neurosurgeon), வைத்தியர்கள், தாதியர்கள், கதிரியக்கவியலாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் முதலான மருத்துவக் குழுவினர் இணைந்து இந்த நுட்பமான நவீன சிகிச்சையை எமது வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொண்டமை வைத்தியசாலை வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். மருத்துவக் குழுவினர் மிகக் குறைந்த வளங்களுடன் இந்த நவீன சிகிச்சையை மேற்கொண்டமை பாராட்டுக்குரியது.
அனூரிசம் என்பது இரத்த நாடிக் குழாய்களில் ஏற்படும் பலூன் போன்ற சிறிய விரிவு ஆகும். இது தற்செயலாக அல்லது இரத்தக் கசிவு ஏற்படும் போது ஊடுகதிர்ப்படம்(ஸ்கான்) மூலமும் கண்டுபிடிக்கப்படலாம்.
மூளை போன்ற இரத்த ஓட்டம் கூடிய உடற்பாகங்களில் இவ்வாறான அனூரிசம் இருப்பது ஆபத்தானது. விபத்துக்களில் அல்லது சடுதியான இரத்த ஓட்ட மாற்றங்களினால் இவற்றிலிருந்து இரத்தக் கசிவு ஏற்படலாம். மூளையில் ஏற்படும் இதுபோன்ற இரத்தக் கசிவுகள் உயிராபத்தை ஏற்படுத்தலாம்.
மருத்துவப் பரிசோதனையின் போது இவ்வாறான அனூரிசங்கள் அடையாளம் காணப்பட்டால் இருவகையான சிகிச்சை முறைகள் தற்போது பின்பற்றப்படுகின்றன.
- சத்திரசிகிச்சை முறை – இது நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் மண்டையோட்டில் துவாரத்தை எற்படுத்திச் செய்யும் பாரிய சத்திர சிகிச்சையாகும்.
- காலிலுள்ள நாடியினூடாகச் சிறிய துவாரத்தை ஏற்படுத்தி அதனூடாக நுண்ணிய குழாய் ஒன்றை மூளை வரை செலுத்தி மூளை நாடியில் ஏற்பட்ட விரிவை பிளாற்றினம் உலோகச் சுருள்களால் அடைத்தல் (Endovascular aneurysm coiling) – இது இடையீட்டு கதிரியக்கவியல் மருத்துவ நிபுணர் (Interventional Radiologist) கதிரியக்கவியல் கூடத்தில் மேற்கொள்ளும் நவீன சிகிச்சை முறையாகும்.
விபத்துக்களின் போது மூளையின் உட்புறத்தில் ஏற்படும் இரத்தக் கசிவுகளை நிறுத்த இந்த நவீன சிகிச்சை முறையை மேற்கொள்ளத் தீர்மானிக்கும்போது உரிய அளவுடைய பிளாற்றினம் சுருள்கள் கையிருப்பில் இருப்பது மிகவும் அவசியமாகும். தற்போதைய நிலையில் அரசினால் இதனை வழங்க முடியாதுள்ளது. இவற்றைக் கொள்வனவு செய்வதற்கான நிதியைத் தாராளமனம் படைத்த நன்கொடையாளர்கள் வழங்க முன்வரும்போது எதிர்வரும் காலங்களில் இத்தகைய நவீன சிகிச்சைகளைத் தொடர்ச்சியாக யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ள முடியும். இதற்கு ஏறத்தாள ரூபா 5 மில்லியன் நிதி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் ஆளணி எண்ணிக்கை குறைவாக இருப்பினும் வைத்தியசாலையானது ஒரு தேசிய வைத்தியசாலையடன் ஒப்பிடக் கூடிய பல்துறை விசேட வைத்திய நிபுணர்களைக் கொண்டுள்ளதுடன் பல்வேறு நவீன மருத்துவ சேவைகளையும் சிறப்பாக வழங்கி வருகிறது. வட மாகாணம், கிழக்கு மாகாணம் மட்டுமன்றி புத்தளம், சிலாபம் முதலான வடமேல் மாகாணத்திலிருந்தும் அனுராதபுரத்திலிருந்தும் நோயாளர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வருகிறார்கள். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் இன்று தெற்கிலிருந்து பொதுமக்கள் சிசிச்சையை நாடி யாழ். போதனா மருத்துவமனைக்கு வருகின்றனர். குறிப்பாகக் கண்சத்திர சிகிச்சைக்காகவும், திறந்த இருதய சத்திரசிகிச்சை மற்றும் நரம்பியல் சத்திர சிகிச்சைக்காகவும் இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் பொது மக்கள் இவ் வைத்தியசாலைக்கு வருகின்றனர்.
தற்போது சுபாஷ் விடுதியிலியங்கும் இருதய சத்திரசிகிச்சைக் கிளினிக் பிரிவில் சிகிச்சைபெற அனுராதபுரம், நீர்கொழும்பு, புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு முதலான வடமத்திய, வடமேல், மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து மாதந்தம் 50 இற்றும் அதிகமானவர்கள் வருகின்றனர்.
இலங்கையில் சிறந்த முறையில் தொலைமருத்துவ சேவை மூலம் சர்வதேச மற்றும் தேசியரீதியில் முன்னிலையில் விளங்கும் துறைசார் விசேட மருத்துவ வல்லுநர்களது ஆலோசனையைப் பெற்று இப்பிராந்தியத்தில் சிகிச்சை பெறும் பொதுமக்களுக்கு மிகச்சிறந்த கிகிச்சையைத் தொடர்ச்சியாக வழங்கிவரும் இலங்கையின் முன்னோடி வைத்தியசாலையாகவும் ஒரேயொரு வைத்தியசாலையாகவும் யாழ். போதனா வைத்தியசாலையே திகழ்கின்றது. 2019 முதல் தொலைமருத்துவ சேவையை நாம் சிறந்த முறையில் வழங்கி வருகின்றோம்.
இன்று நாம் பல்வேறு நெருக்கடிகளை, பற்றாக்குறைகளை எதிர் நோக்குகின்றோம். கடந்த 3 வருடங்களாக விக்ரோரியா வீதியிலமைந்துள்ள சுபாஷ் விடுதியின் ஒருபகுதியில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக இயங்கிவரும் அனைத்து கிளினிக் அலகுகளையும் வரும் செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் இடம்மாற்றி அப்பகுதியை உரிமையாளர்களிடம் ஒப்டைக்க வேண்டியுள்ளது. சுபாஷ் விடுதியில் தினமும் 1000 இற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். பிரதான வைத்தியசாலைக்கு அண்மையில் கிளினிக்கை இயக்குவதற்குப் பொருத்தமான வேறோர் இடத்தைப் பெற்றுக் கொள்வது என்பது மிகவும் சவால் மிக்கதாகக் காணப்படுகிறது.
1850 ஆம் ஆண்டு இந்த வைத்தியசாலையை வட மாகாண அரசாங்க அதிபராக இருந்த பிரித்தானிய அயல்நாட்டுப் பிரதிநிதி சேர். பேர்சிவல் அக்லண்ட் டைக் அவர்கள் ஆரம்பித்தபோது மருத்துவமனையைச் சூழ வயலும் தோட்டங்களுமே காணப்பட்டன. அன்று யாழ்ப்பாண நகரம் விளைநிலமாக இருந்தது; வர்த்தக நகரமாக இருக்கவில்லை. யாழ்ப்பாண நகரும் அதனைச் சுற்றி உருவான வர்த்தக நகரும் இந்த வைத்தியசாலையை மையப்படுத்தியே ஆரம்பிக்கப்பட்டு வளர்ச்சியடைந்தது என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
தினமும் 5000 இற்கும் அதிகமானவர்களுக்குச் சிகிச்சை வழங்கும் வடபகுதியின் ஒரேயொரு சிறப்புவகை (Tertiary care) மருத்துவமனையாகிய யாழ். போதனா வைத்தியசாலையானது இப்பகுதியில் வாழும் மக்களுடைய வைத்தியசாலை என்பதை நாம் அனைவரும் உணர்ந்து அதன் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
மருத்துவக் கலாநிதி த. சத்தியமூர்த்தி
பணிப்பாளர்
போதனா மருத்துவமனை
யாழ்ப்பாணம்