மன்னாரிலும் கிளிநொச்சி – பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும் மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, அண்மையில் தயாரிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரமொன்றை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
442 மில்லியன் டொலர் முதலீட்டில் மன்னாரிலும் பூநகரியிலும் 500 மெகாவாட் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை அமைப்பதற்காக இலங்கைக்கும் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை 2022 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதுடன், ஏற்கனவே திட்டத்திற்கான காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதானி நிறுவனத்தின் இந்த திட்டம் தொடர்பாக கடந்த 14 ஆம் திகதி மீண்டும் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் சரித்த ஹேரத் கூறியுள்ளார்.,
மின்சார சபை சட்டத்தின் 43 ஆவது சரத்திற்கு அமைய, இத்தகைய முதலீடொன்றை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதாக இருந்தால் போட்டித்தன்மையுடன் கூடிய விலை மனு கோரல் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான திட்ட யோசனை முன்வைக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மாத்திரம் விலைமனு கோரலின்றி திட்டத்தை பரிசீலிக்க முடியும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வித விலைமனு கோரலும் இன்றி இந்த திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதாக 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் தௌிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பகிரங்க விலை மனு கோரலின்றி இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுவதை நியாயப்படுத்துவதற்கான ஒரு விடயமும் அந்த அமைச்சரவை பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
அதானி நிறுவனத்தின் திட்டத்தை இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கிய திட்டமாக கருத வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அதானி குழுமம் என்பது இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனம் அல்லவென்பதுடன், கௌதம் அதானி என்ற பிரபல வர்த்தகருக்கு சொந்தமான வர்த்தகக் குழுமமாக அது அமைந்துள்ளது.
எவ்வாறாயினும், அதானி திட்டத்தை இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கும் திட்டமாகக் கருதி இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கலாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மின்சார சபையின் அப்போதைய தலைவர் MMC பெர்டினாண்டோவிடம் COPE குழு கேள்வி எழுப்பியபோது, அவர் முரணான பதில்களை வழங்கியிருந்தார்.
மின்சார சபையின் முன்னாள் தலைவரது கருத்துகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிராகரித்தார். இதனதை் தொடர்ந்து மின்சார சபையின் முன்னாள் தலைவர் தாம் தெரிவித்த கருத்துகளை மீளப்பெற்றதுடன், பதவியையும் இராஜினாமா செய்தார்.
இதேவேளை, பேராசிரியர் சரித்த ஹேரத் நேற்று முன்தினம் (29.08.23) வௌிக்கொணர்ந்த, புதிய அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய இது தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌிவந்துள்ளன.
தற்போதைய ஜனாதிபதி அண்மையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய, அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட திட்டம் இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கலாக கருதப்படுவது நியாயப்படுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொடுக்கல் வாங்கல் அவ்வாறு நியாயப்படுத்தப்படுகின்ற அதேவேளை, 2022 ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அப்பால் செயற்றிட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் அதானி நிறுவனத்திற்கு சந்தர்ப்பமளிக்கப்படவுள்ளது.
மின்சார சபைக்கு மாத்திரம் உரிமையுள்ள மின் விநியோகக் கட்டமைப்பொன்றை அமைப்பதற்கு எவ்வித விலை மனு கோரலும் இன்றி அதானி நிறுவனத்திற்கு அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சரித்த ஹேரத் நேற்று சுட்டிக்காட்டினார்.
எரிசக்தி துறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலேயே அதானி நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டங்களும் மின் விநியோகக் கட்டமைப்பும் முன்னெடுக்கப்படவுள்ளமை உலக வங்கி அண்மையில் விடுத்த அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் கரையோர பகுதிகளை பயன்படுத்தி 56,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான இயலுமை உள்ளது.
இதற்கு மன்னார் வளைகுடா மற்றும் மன்னார் தீவுகளை அண்மித்த பகுதிகளும் புத்தளத்தை அண்மித்த பகுதிகளும் மிகவும் உகந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்காக அதானி நிறுவனத்திற்கு ஏற்கனவே காணி ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவிடம் வினவியபோது, இந்த யோசனையை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக அவர் கூறினார்.
அதானி நிறுவனத்திடம் இந்த திட்டம் கையளிக்கப்படவுள்ள விதம் தொடர்பாக இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.