நல்லூர் உற்சவ காலத்தையொட்டி யாழ் போதனா வைத்தியசாலை புற்றுநோயியல் பிரிவினரின் ஏற்பாட்டில் “வரும்முன் காப்போம் ” சுகாதாரத் திருவிழா விழிப்புணர்வு செயற்பாட்டினை நடாத்தி வருகின்றனர்.
புற்று நோயியல் சத்திரசிகிச்சை நிபுணர் கணேசமூர்த்தி சிறிதரன் தலைமையிலான மருத்துவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு வரும் இவ் விழிப்புணர்வு செயற்திட்டம், தினமும் மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரை வரை நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள மங்கையற்கரசி வித்தியாலயத்தில் இலவசமாக இடம் பெற்று வருகின்றது.
இச் செயற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுடன் அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் உடல் பருமன், குருதி அமுக்கம், நீரிழிவு, பெண்நோயியல், புற்றுநோயியல் , மற்றும் உணவு , விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பிரிவு என பல்வேறு மருத்துவப் பிரிவினராலும் ஆண் பெண் வேறுபாடின்றி அனைத்து வயதினருக்கும் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதுடன் நோய் நிலை தொடர்பான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப் பட்டு வருகின்றன.
எனவே , ஆலய சூழலில் இடம்பெறும் இப் பணியில் மக்கள் பங்குபற்றி தம் உடல் சுகாதார நிலைமைகளை அறிந்து கொள்ளும் படி வைத்தியர் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
அதேவேளை நல்லூர் உற்சவ காலத்தில் மட்டுமன்றி 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தயக்கமின்றி யாழ் போதனா வைத்தியசாலையின் “”புற்று நோயை ஆரம்பத்தில் கண்டறியும் மையம் “”பிரிவில் 021 222 2640 அல்லது 070 777 2640 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.