Home இலங்கை முத்த வெளியில் திரண்ட சனங்கள் – நிலாந்தன்!

முத்த வெளியில் திரண்ட சனங்கள் – நிலாந்தன்!

by admin

இந்திய அமைதிகாக்கும் படையினரால் யாழ்.பொது வைத்தியசாலையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்ட நாள் அது என்பதனால்,சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியை வேறொரு நாளில் வைக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேட்டிருந்தது. அக்கோரிக்கையை சந்தோஷ் நாராயணன் ஏற்கவில்லை.ஆனால் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் போரில் உயிர்நீத்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.நிகழ்ச்சியில் ஈழப்போரைப் பிரதிபலிக்கும் பாடல்கள் பாடப்பட்டன. அப்பொழுது அங்கு கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரித்து அதைக் கொண்டாடினார்கள்.

அது ஒரு மழை நாள்.அன்று பின்னேரம் மழை விட்டுத் தந்தது.முத்த வெளியில் கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை காணாத சன வெள்ளம். அந்த இடத்தில் இதற்கு முன் வர்த்தகக் காட்சிகள் நடந்திருக்கின்றன.அவற்றுக்கும் மக்கள் திரண்டு வந்தார்கள்.ஆனால் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சிக்கு முன்னப்பொழுதும் இல்லாத அளவுக்கு சனம் திரண்டது.முனியப்பர் கோயிலுக்கு முன்னுள்ள வெளியிலும் சாலைகளின் இரு புறங்களிலும் வாகனங்கள் வரிசையாக நின்றன.பால் வேறுபாடு இன்றி,வயது வேறுபாடு இன்றி பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி அது.பாடகர்கள் பாடப்பாட அங்கு கூடியிருந்த இளையோர் உற்சாகமாக ஆடினார்கள்.

அது தமிழ் மக்களின் கூட்டு மனோநிலையைக் காட்டியது.அவர்கள் கொண்டாட விரும்புகிறார்கள்.கொண்டாடுவதற்கு கிடைக்கும் எந்த ஒரு தருணத்தையும் அவர்கள் இழக்க விரும்பவில்லை. பெருவிழாக்கள்,பெருஞ் சந்தைகள் தொடக்கம் தனிப்பட்ட கொண்டாட்டங்கள் வரை மக்கள் ஆடிப்பாடி சந்தோசமாக இருக்க விரும்புகிறார்கள்.அவர்கள் சன்னியாசிகள் இல்லை. இச்சைகளைத் துறந்தவர்கள் இல்லை. எனவே கொண்டாடுவார்கள்.

அப்படிப்பட்ட கொண்டாட்டங்களை எப்பொழுது ஒழுங்குபடுத்த வேண்டும் எப்பொழுது ஒழுங்குபடுத்தக் கூடாது என்பதனை தீர்மானிக்க முற்படும் கட்சி அல்லது மக்கள் இயக்கம் ஒன்றில்,ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அல்லது அங்கு திரளும் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.ஏற்பாட்டாளர்கள் கேட்கவில்லை என்று சொன்னால் தமது மக்களை அந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்குமாறு கேட்க வேண்டும்.ஆனால் அவ்வாறு தமிழ் மக்களை வழிநடத்தும் அளவுக்கு தமிழ் தேசியப்பரப்பில் ஒரு கட்சியோ மக்கள் இயக்கமோ இல்லை. அதாவது தமிழ் மக்கள் மத்தியில் பொதுக் கருத்தைத் திரட்டுமளவுக்கு சக்திமிக்க கட்சியும் கிடையாது;மக்கள் இயக்கமும் கிடையாது.

முதலாவதாக கட்சிகளிடம் 2009க்குப் பின்னரான இளைய தலைமுறையின் கூட்டு மனோநிலையை வசப்படுத்தவல்ல பொருத்தமான ஒரு கலைத்தரிசனம் இருக்க வேண்டும். சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் கேட்டார்…மக்களுடைய இக்கூட்டு மனோநிலையை கட்சிகள் விளங்கி வைத்திருக்கின்றனவா?மக்களை விடுதலைக்கான கலையை நோக்கி ஈர்க்கத்தக்க செயல் திட்டங்கள் எந்த ஒரு கட்சியிடமாவது உண்டா? எந்த ஒரு கட்சியிடமாவது கலை பண்பாட்டு இயக்கங்கள் உண்டா? என்று.

கலை இல்லாத ஒரு படை மந்தப்படை என்று சீனப் புரட்சியின் தலைவர் மாவோ சே துங் சொன்னார். “பண்பாடுதான் தேசிய விடுதலையின் திறப்பு” என்று ஆபிரிக்க அறிஞரும் சுதந்திரப் போராட்டத் தலைவருமான அமில்கார் கப்ரால் சொன்னார்.

ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் எல்லா விடுதலை இயக்கங்களிடமும் கலை கலாச்சார அமைப்புகள் இருந்தன.ஆயுதப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கிய காலகட்டத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் மறுமலர்ச்சிக் கழகம் என்ற அமைப்பு இயங்கியது.அது விடுதலையை ஒரு மறுமலர்ச்சியாகப் பார்த்தது. பண்பாட்டு மறுமலர்ச்சி. அரசியல் மறுமலர்ச்சி.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் கலை ஒரு பிரிக்கப்படவியலாத பகுதியாக இருந்தது.பொங்குதமிழ் பேரெழுச்சிகளிலும் அப்படித்தான்.ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் அரசியல் அரங்கில் காணாமல் போனவற்றின் பட்டியலில் கலை பண்பாட்டு இயக்கங்களும் சேர்ந்து விட்டன. எழுக தமிழ்களுக்கு இசை இருக்கவில்லை; கலை இருக்கவில்லை.

பொங்குதமிழ் எழுச்சிகளை ஒழுங்கமைத்தவரும் அரங்கச் செயற்பாட்டாளரும் ஆகிய கலாநிதி சிதம்பரநாதன் கந்தர்மடத்தில் பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடம் என்ற பெயரில் ஓர் அமைப்பை நடத்தி வருகிறார்.

ஆனால் கட்சிகள் மத்தியில் அவ்வாறான கலை விளக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.தமது மக்களை தமது அரசியல் இலக்குகளை நோக்கித் திரட்டுவதற்குத் தேவையான கலைத் தரிசனம் எந்த ஒரு கட்சியிடமும் கிடையாது. சில பாடல்கள் சில நாடகங்கள் தவிர,கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு பெரிய கலை வறட்சி நிலவுகிறது.கடந்த ஆண்டு நிகழ்ந்த கோட்டா கோகமவின் கலை வெளிப்பாட்டோடு ஒப்பிடுகையில் இது பாரதூரமான வறட்சி.

ஓர் ஆயுதப் போராட்டத்தின்போது சமூகம் பெருமளவுக்கு மூடப்பட்டி ருக்கும். அது காவலரண்களால் திட்டவட்டமாக மூடப்பட்டிருக்கும்.ஆனால் போரில்லாத நாட்களில் அவ்வாறல்ல.குறிப்பாக போரில் தோற்கடிக்கப்பட்ட ஒரு சமூகத்தை எப்படித் திறப்பது? எங்கே திறப்பது? எதை நோக்கித் திறப்பது? என்பதனை போரில் வெற்றி பெற்ற தரப்பே தீர்மானிக்கின்றது.

கடந்த 15 ஆண்டுகளில் அவ்வாறு திறக்கப்பட்ட வழிகளின் ஊடாக நுண்கடன் நிதி நிறுவனங்கள் வந்தன.பிளாஸ்டிக் வியாபாரிகளும் அரும்பொருட்களைக் கவர்ந்து செல்வோரும் வந்தார்கள்.போதைப்பொருள் வியாபாரிகளும் முகவர்களும் வந்தார்கள்.கிரீஸ் மனிதன் வந்தான்.குள்ள மனிதன் வந்தான். வேறு யார் யாரோ எல்லாம் வந்தார்கள்.ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்களை எப்படிப் பண்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தோற்கடிப்பது என்று சிந்தித்து திட்டமிட்டு வெளியில் இருந்து பல்வேறு வகைப்பட்ட சக்திகளும் தமிழ்ச் சமூகத்தில் உட் பாய்ச்சப்படுகின்றன.

ஒரு காலம் இளையவர்கள் உன்னதமான இலட்சியங்களால் வழிநடத்தப்பட்டார்கள்.ஆனால் இப்பொழுது அப்படியல்ல.இளையவர்களை எப்படி அரசியல் நீக்கம் செய்யலாம்?அவர்களை எப்படிப் போதைக்குள் மூழ்கடிக்கலாம்? அவர்களுடைய கைகளில் எப்படி வாள்களைக் கொடுத்து மோத விடலாம்?அவர்களுடைய நம்பிக்கைகளை;விசுவாசத்தை;கவனக் குவிப்பை எப்படி இடம் மாற்றலாம்? அவர்கள் மத்தியில் இருந்தே எப்படி முகவர்களை உருவாக்கலாம்?என்றெல்லாம் சிந்தித்து செயல்படுவதற்கு அரச பலமும் அரச வளங்களும் பயன்படுத்தப்படுகின்றன.அது ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படுகின்றது;ஒருங்கிணைக்கப்படுகிறது. அது ஒரு பண்பாட்டுச் சிதைப்பு; ஒரு பண்பாட்டு நீக்கம். அதை எதிர்கொள்வதற்கு தமிழ்ச் சமூகம் தயாராக உள்ளதா? அதை குறித்து தமிழ்க் கட்சிகளிடம் பொருத்தமான அரசியல் கலைத் தரிசனங்கள் உண்டா?

இந்த மண் எங்களின் சொந்த மண் என்று பாடிய ஒரு மண்ணை விட்டு எப்படி வெளியேறலாம் என்று இளையவர்கள் சிந்திக்கும் ஒரு காலகட்டம் இது. வெளிநாட்டுக்கு போவதற்காக தங்களை தயார்படுத்தும் இளையோர் மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக அண்மையில் ஒரு மனநல மருத்துவர் சுட்டிக்காட்டினார்.இது என்னுடைய நாடில்லை;இங்கே நான் இருக்கப் போவதில்லை,இருக்கின்ற கொஞ்ச காலத்துக்கு எப்படியும் இருந்து விட்டு போகலாம் என்று சிந்திக்கும் ஒரு போக்கு அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.எப்படியும் இருந்துவிட்டுப் போகலாம் என்பதுதான் பண்பாட்டுச் சிதைவு.

1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட பொழுது நாடாளுமன்றத்தில் கொல்வின்.ஆர்.டி.சில்வா பின்வருமாறு சொன்னார்…”தமிழர்களை நீங்கள் அவமதித்தால்;கேவலமாக நடத்தினால்;துஷ்பிரயோகம் செய்தால்;ஒடுக்கினால்; அவர்களுக்குக் கரைச்சல் கொடுத்தால்,அந்தப் போக்கின் விளைவாகசிலோனில் (இலங்கையில்)தனக்கென்று குறிப்பிட்ட ஒரு மொழியை,ஒரு பண்பாட்டைக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட அந்த இனத்துவ இருப்பிற்குள் இருந்து ஒரு புதிய தேசியவாதம் எழுவதற்கு நீங்கள் காரணமாக அமைவீர்கள்.இப்பொழுது அவர்கள் கேட்பதை விடவும் அப்பொழுது அவர்கள் அதிகமாக கேட்பார்கள். அதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டி வரும்”

அதாவது பலமான ஒரு பண்பாட்டை கொண்டிருக்கும் தமிழர்களை ஒடுக்கினால் வரக்கூடிய விளைவுகளை குறித்து அவர் எச்சரிக்கின்றார்.அதுதான் உண்மை.தமிழ் மக்கள் ஆழமான பண்பாட்டு வேர்களைக் கொண்டவர்கள்.கீழடி ஆய்வுகளின்படி தமிழ் வேர்கள் மேலும் ஆழத்துக்குச் செல்கின்றன.ஆழமான பண்பாட்டு வேர்களைக் கொண்ட மக்களை;மிகப் பலமான பண்பாட்டு நடுத்தர வர்க்கத்தை கொண்டிருக்கும் மக்களை; ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கடித்தாலும், அரசியல் ரீதியாக, பண்பாட்டு ரீதியாகத் தோற்கடிப்பது கடினம் என்பதைத்தான் கடந்த 14 ஆண்டுகள் நிரூபித்திருக்கின்றன.

ஆயுதப் போராட்ட காலகட்டமும் கடந்த 14 ஆண்டுகளும் ஒன்றல்ல. மாறிவரும் தொழில்நுட்பச் சூழலை;மாறிவரும் அரசியல் பண்பாட்டுச் சூழலை;தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.தமிழ் கூட்டுக் உளவியலின் மீது எப்படிச் செல்வாக்கு செலுத்துவது? அதை அரசியல் நீக்கம் செய்ய முற்படும் சக்திகளிடம் இருந்து அதை எப்படிக் காப்பாற்றுவது? அதைப் பண்பாட்டு நீக்கம் செய்ய முற்படும் சக்திகளிடம் இருந்து எப்படிக் காப்பாற்றுவது?அதை விடுதலைக்கான பண்பாட்டை நோக்கி எப்படி வழி நடத்துவது?

கொல்வின்.அர்.டி.சில்வா கூறியதுபோல தமிழ் மக்களின் தனித்துவமான பண்பாடுதான் தமிழ் மக்களை ஒரு தேசமாக வனையும் பிரதான மூலக்கூறுகளில் ஒன்று ஆகும். ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாக வனையும் அம்சங்கள் ஐந்து. நிலம் அதாவது தாயகம்;இனம்;பொதுமொழி;பொதுப் பண்பாடு;பொதுப் பொருளாதாரம் என்பனவே அந்த ஐந்து மூலக்கூறுகளும் ஆகும்.

எனவே 2009 க்குப் பின்னரான பண்பாட்டு மறுமலர்ச்சியை ஏற்படுத்த விரும்பும் எவரும் அதன் தக்கபூர்வ விளைவாக தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுகிறார்கள்.அதை மறுவளமாகச் சொன்னால் தமிழ்மக்களை ஒரு தேசமாக திரட்டாமல் கட்சிகளாகப் பிரிக்கும் எவரும் பண்பாட்டு விழிப்பை ஏற்படுத்த முடியாது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More