செலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மரண விசாரணையின் தீர்ப்பு இம்மாதம் 14 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொத்தலாவலவின் மரண விசாரணை தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதவான் உத்தரவிட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
லலித் கொத்தலாவலவின் மரண விசாரணை தொடர்பான சாட்சியங்கள் நிறைவடைந்துள்ளதுடன் இதுவரை 8 சாட்சிகள் மரண விசாரணை தொடர்பான சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.
உயிரிழந்த கொத்தலாவலவின் மனைவியின் சகோதரியான ஷெரின் பேஷான் விஜேரத்ன, பம்பலப்பிட்டி காவற்துறை உத்தியோகத்தர் மற்றும் கொத்தலாவலவின் கீழ் பணியாற்றிய பல பணியாளர்களும் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொத்தலாவலவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவியின் சகோதரியான திருமதி. ஷெரின் பேஷான் விஜயரத்ன பம்பலப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கொத்தலாவல இல. 28, எலிபேங்க் வீதி, கொழும்பு 5 என்ற முகவரியில் வசிப்பதாகவும், ஆனால் அவருக்குக் கீழ் பணிபுரிந்த பலரது வேண்டுகோளுக்கு இணங்க, கொழும்பு 4, டிக்மன் லேன், இல. 13 இல் உள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சாட்சிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கொத்தலாவலவின் கீழ் பணியாற்றிய இரண்டு குழுக்கள் அவரது சொத்துக்களை கைப்பற்றி, சொத்தை கையகப்படுத்துவதற்காக டிக்மன் வீதியில் உள்ள 13 இலக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கொத்தலாவலவை தங்க வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.