இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மேலும் அதிகமாக வரி விதித்து மக்கள் மீது சுமையை ஏற்படுத்தாது, கடன்களை செலுத்துவதற்கும், பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பவும் “திருடப்பட்ட சொத்துக்களை” மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை திவாலாக்கியதற்கு யார் காரணம் என்ற வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு அரிய மற்றும் சிறந்த தீர்ப்பு. மனுவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்க மனுதாரர்கள் கோராததால், தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் தண்டனை விதிக்கவில்லை என சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் அவர் தெரிவித்துள்ளார் .
இந்நாட்டு மக்கள் நீதிமன்றத்திற்குச் சென்று, உயர் நீதிமன்றத்தால் வங்குரோத்து நிலைமைக்குக் காரணமானவர்களென தீர்ப்பளிக்கப்பட்டவர்களிடமிருந்து தண்டனை மற்றும் இழப்பீடு கோர முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
“வேலைவாய்ப்பை இழந்த குடிமக்கள், தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி வெட்டப்பட்டுகின்றவர்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பட்டினியில் கிடக்கும் 2 மில்லியன் குழந்தைகளின் பெற்றோர்கள் அதற்கான பரிகாரம் தேடலாம்,” என்று அவர் கூறினார்.
வெளிநாட்டுக் கணக்குகள் மற்றும் நிறுவனங்களில் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் அல்லது இலங்கையில் உள்ள காணிகள், ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணத்தையும் காவற்துறை விசாரணைகள் மூலம் கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்க பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
“திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான உதவிகளை வழங்கும் தனிப் பிரிவை உலக வங்கி கொண்டுள்ளது. அவ்வாறாக பிலிப்பைன்ஸில் உள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டு தங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன,” என்று அவர் கூறினார்.