வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் சித்திரவதைக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு காவற்துறை உத்தியோகத்தர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் நாளை மறுதினம் (27.11.23) திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு தயார்ப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளையிட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
25 வயதுடைய இளைஞன் காவற்துறை காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமையாற்றும் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்ததை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.