Home இலங்கை இமாலயப் பிரகடனம்: தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு? நிலாந்தன்!

இமாலயப் பிரகடனம்: தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு? நிலாந்தன்!

by admin

 

நோர்வீஜிய மத குருவாகிய அருட் தந்தை.ஸ்டிக் உட்னெம்-Fr.Stig Utnem-. இலங்கைத தீவின் நல்லிணக்க முயற்சிகளில் மதத்தலைவர்கள் பங்களிப்புச் செய்யலாம் என்று சிந்திப்பவர்.அதற்காக உழைப்பவர்.2014இல் நான் நோர்வேக்குச் சென்றபொழுது அவரைச் சந்தித்தேன்.இலங்கையில் திருச்சபைகளின் பங்களிப்போடு இன நல்லிணக்க முயற்சி ஒன்றினை முன்னெடுக்கவிருப்பதாக அவர் என்னிடம் சொன்னார்.அதற்கு நான் சொன்னேன்,நல்ல விஷயம்.ஆனால் நல்லிணக்க முயற்சிகளை திருச்சபைகளில் இருந்து தொடங்குவதற்கு பதிலாக விகாரைகளில் இருந்து தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று.ஏனென்றால் யுத்தம் அங்கிருந்துதான் தொடங்குகின்றது.எனவே அங்கிருந்துதான் சமாதானமும் தொடங்க வேண்டும்.மாறாக திருச்சபைகளில் இருந்து அதைத் தொடங்க முற்பட்டால் புலம்பெயர்ந்த தமிழர்களும் அவர்களுக்குச் சார்பான வெள்ளைக்கார நாடுகளும் கிறிஸ்தவ அமைப்புக்களுக்குடாக தமது யுத்த வெற்றியைத் தட்டிப்பறிக்க பார்க்கின்றனர் என்று சிங்கள பௌத்த அரசியல்வாதிகள் வியாக்கியானம் செய்வார்கள் என்று.

கடந்த மாதம் 23-29ஆம் திகதி வரையும் இலங்கையிலிருந்து மதத் தலைவர்களின் குழு ஒன்று நோர்வேக்கு விஜயம் செய்தது.ஒஸ்லோ முருகன் ஆலயத்தில் கடந்த 24 ஆம் திகதி ஒரு மத நல்லிணக்க ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டது.அதில் உரையாற்றிய திருகோணமலை கத்தோலிக்க மறை மாவட்டத்தின் ஆயர் தன்னுடைய மறை மாவட்டத்தில்,சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இரு வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்ற தொனிப்பட கருத்து தெரிவித்துள்ளார்.அதாவது திருக்கோணமலையில் சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்பில் சட்டம் அப்படித்தான் பிரயோகிக்கப்படுகிறது என்று பொருள்.

மேற்படி மதத் தலைவர்கள் குழுவின் நோர்வேப் பயணத்திற்குரிய ஏற்பாடுகளின் பின்னணியிலும் அருட்தந்தை.ஸ்டிக் உட்னெம் இருந்திருக்கிறார்.இலங்கைத்தீவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் அவர் இப்பொழுது ஏறக்குறைய களைத்துப் போய்விட்டார் என்று அவரைத் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

இப்படிப்பட்டதோர் மத அரசியல் பின்னணியில்தான் கடந்த வாரம் ஹிமாலய பிரகடனம் என்ற ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டிருக்கிறது.ஜி.ரி.எஃப் என்று அழைக்கப்படும் உலகத் தமிழர் பேரவையும்,”சிறந்த இலங்கைக்கான பௌத்த சங்கமும்” இணைந்து உருவாக்கியதே மேற்படி இமாலய பிரகடனம் ஆகும். கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்துக்கு ஒரு தொகுதி பிக்குகளை அழைத்துச் சென்ற ஜி.ரி.எஃப்.,அங்கு வைத்து அப்பிரகடனத்தைத் தயாரித்திருக்கின்றது.கிட்டத்தட்ட 9 மாதங்களின் பின் அதை இப்பொழுது வெளியிட்டிருக்கிறார்கள்.

கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு பௌத்த குருமாரோடு இணைந்து ஒரு தமிழ்த் தரப்பு இவ்வாறு பிரகடனம் ஒன்றை வெளியிட்டிருப்பது இதுதான் முதல் தடவை.

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தனி நாட்டைத் தவிர வேறு எந்த ஒரு தீர்வைப் பெறுவதாக இருந்தாலும்,பௌத்த மகா சங்கத்தோடு உரையாடத்தான் வேண்டும்.சமாதானம் ஆகட்டும்,நல்லிணக்கமாகட்டும் எதுவும் பௌத்த விகாரைகளில் இருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

கடந்த ஒரு நூற்றாண்டு காலம் முழுவதிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளின் போது,அவற்றைத் தடுத்ததில் அல்லது குழப்பியதில் மகா சங்கத்துக்கு முக்கிய பங்கு உண்டு.இலங்கைத் தீவின் பௌத்தம்,ஓர் அரச மதம், அரசியலில் தீர்மானிக்கும் சக்திகளாக காணப்படும் அரசியல்வாதிகள்; படைத் தரப்பு;சிங்கள பௌத்த ஊடகங்கள் என்பவற்றோடு பௌத்த மகாசங்கமும் ஒன்று.எனவே மகாசங்கத்தின் ஆசீர்வாதங்களின்றி இலங்கைத்தீவில் சமாதானத்தைக் கொண்டு வர முடியாது.

ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதிக்குள் தமிழ்த் தரப்பிலிருந்து மகா சங்கங்களை நோக்கிச் சென்றவர்கள் மிகக்குறைவு.விக்னேஸ்வரன் முதலமைச்சராகப் பதவியேற்றதும் மகாநாயக்கர்களைச் சந்திக்கச் சென்றார்.அதில் ஒரு பீடம் அவரை மதித்து நடத்தியதாகவும் மற்றொரு பீடம் அவரை மதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.அதன்பின் தமிழ் அரசியற் சமூகத்தில் இருந்து யாரும் மகாநாயக்கர்களோடு உரையாடவில்லை. அரசாங்கம் தமிழ்ப் பகுதிகளுக்குத் திட்டமிட்டு நியமிக்கும் தமிழ் ஆளுநர்கள் மகாநாயக்கர்களிடம் சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றார்கள்.அதுபோல அண்மையில் கொழும்பில் பெரிய அளவில் முதலீடு செய்வதற்கு வந்த புலம் பெயர்ந்த தமிழ் முதலாளி ஒருவரும் தன் மனைவியோடு சென்று மகா சங்கத்தினரிடம் ஆசீர்வாதங்களைப் பெற்றிருந்தார்.மேலும் இந்தியாவில் இருந்து வரும் அமைச்சர்களும் தூதுவர்களும் மகா சங்கத்தினரிடம் சென்று ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள்.இப்படிப்பட்டதோர் பின்னணியில்,மகா சங்கத்தின் ஆசிர்வாதத்தோடு ஒரு தீர்வு முயற்சியை ஜி.ரி.எஃப் தொடங்கியிருக்கிறது.மகாசங்கத்தின் ஆசீர்வாதம் கிடைத்திருப்பதால் அம்முயற்சிக்கு அதிக கவனிப்புக் கிடைத்திருக்கிறது.

ஹிமாலயா பிரகடனம்,இனப்பிரச்சினைக்கான தீர்வுக்குரிய மென்மையான வரையறைகளை கொண்டிருப்பதாக ஜி.ரி.எஃப்பின் தலைவர் சுரேன் சுரேந்திரன் கூறுகிறார்.ஆம்.அவை மென்மையான வரையறைகள்தான். ஆனால்,அதை மிகச்சரியான வார்த்தைகளிற் சொன்னால்,மகா சங்கத்தின் ஆசிர்வாதங்களைப் பெறுவதற்காகத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அங்கே மென்மையாக்கப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை.

மகாநாயக்கர்களை வணங்க வேண்டும்;மதிக்க வேண்டும்.எப்பொழுது என்றால் புத்தபகவான் கூறியதுபோல அவர்கள் சகலவற்றையும் துறந்த சன்னியாசிகளாக இருக்கும்பொழுது அவர்களை வணங்கலாம்.அது ஆன்மீகம்.ஆனால் புத்தபகவான் வாழ்ந்து காட்டியதற்கு மாறாக மகாசங்கம் அதிகாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பொழுது, அந்தக் கட்டமைப்புடன் பேசப் போகும் தமிழர்கள் மண்டியிட முடியாது.ஏனெனில் அது அரசியல். தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை நீர்த்துப் போகச்செய்து மகாசங்கத்தின் ஆசிர்வாதங்களைப் பெறத் தேவையில்லை.பதிலாக தமிழ்மக்கள் தங்களுடைய பேர பலத்தை அதிகப்படுத்திக் கொண்டு மகா சங்கத்தோடு பேசப் போகலாம்.

ஜி.ரி.எஃப் உடனான சந்திப்பின்போது அஸ்கிரிய பீடாதிபதி கூறியதாக ஒரு தகவலை சுரேன் சுரேந்திரன் தெரிவித்திருந்தார்.யுத்த காலத்தில் தான் வன்னிக்கு வர விரும்பியதாக மகாநாயக்கர் கூறியுள்ளார்.இருக்கலாம். அப்பொழுது தமிழ் மக்களிடம் பேர பலம் இருந்தது.அதனால் மகாநாயக்கர் வன்னிக்கு வர விரும்பியிருக்கலாம். இப்பொழுது தமிழ் மக்களின் பேர பலம் குறைந்து போய்விட்டது.அதனால்தான் தாயகத்துக்கு வெளியில் இருந்து தாயகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பிரகடனங்களை உருவாக்கும் ஒரு நிலை.

ஜி.ரி.எஃப் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவ படுத்தவில்லை.முதலில் அவர்கள் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியிலும் இது தொடர்பாக விவாதித்திருக்க வேண்டும்.அதன்பின் தாயகத்தில் உள்ள தமிழ்க் கட்சிகள்,செயற்பாட்டாளர்கள்,குடிமக்கள் சமூகங்களோடு உரையாடியிருந்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி எதுவும் வெளிப்படையாக நடக்கவில்லை.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இமாலய பிரகடனக் குழுவினரோடு வடமராட்சியைச் சேர்ந்த ஒரு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் காணப்பட்டார்.இவர் சுமந்திரனுக்கு நெருக்கமானவர்.ஆனால் யாழ்ப்பாணத்துக்கு வந்த பிரகடனக்குழு வெளிப்படையாக எந்த அரசியல்வாதியோடும் தன்னை நெருக்கமாகக் காட்டிக் கொள்ளவில்லை.

ஜி.ரி.எஃப் பிரதிநிதிகளும் பிக்குகளும் நல்லை ஆதீனத்தில் சைவ சமயத் தலைவர்களைச் சந்தித்தபொழுது,அதில் பங்குபற்றிய சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டினார். உங்களை எனக்குத் தெரியாது என்பதே அது. அதுதான் உண்மை. அதாவது தாயகத்தில் உள்ள தரப்புகளோடு ஜி.ரி.எஃப் உரையாடியிருக்கவில்லை. இதுபோன்ற முயற்சிகளை தாயகத்தை மையமாகக் கொண்டுதான் முன்னெடுக்க வேண்டும்.தாயகத்துக்கு வெளியில் இருந்து அல்ல.அந்த அடிப்படையில் பார்த்தால், இது ஒரு தலைகீழ் முயற்சி.

இது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஒரு திரட்சியாக இல்லை என்பதைக் காட்டுகின்றது. அங்கேயும் தனி ஓட்டங்கள் பலமாக உள்ளதைக் காட்டுகின்றது. அதுமட்டுமல்ல,மேற்கு நாடுகளிடம் கடனுக்காகத் தங்கியிருக்கும் ஒரு ஜனாதிபதியை;ஐநாவிற்கு வீட்டு வேலைகள் செய்ய வேண்டிய ஒரு ஜனாதிபதியை;அந்த வீட்டு வேலைகளில் ஒன்று ஆகிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவை உருவாக்க முயற்சிக்கும் ஒரு ஜனாதிபதியை ; அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய ஒரு ஜனாதிபதியை; பாதுகாப்பதுதான் இந்த நகர்வின் உள்நோக்கமா என்ற சந்தேகங்களை அதிகப்படுத்துகின்றது.

இந்த இடத்தில் தாயகத்தில் உள்ள கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் குடிமக்கள் சமூகங்களும் ஒரு விடயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். தாயகத்தில் பலமான ஒரு அரசியல் இயக்கம் அல்லது கட்சிகளின் கூட்டு இல்லாத வெற்றிடந்தான் இதற்கெல்லாம் காரணம்.தாயகத்தில் பலமான ஒரு மக்கள் இயக்கம் அல்லது மக்கள் அதிகாரம் இருந்திருந்தால் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் தாயகத்தை நீக்கிவிட்டு இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட முடியாது.அல்லது தாயகத்தில் உள்ள சில அரசியல்வாதிகளின் மறைமுக அனுசரணையோடு இதை முன்னெடுத்திருக்க முடியாது.தாயகத்தில் தமிழ்மக்கள் ஒரு பலமான பேரம் பேசும் சக்தியாக இல்லை.அதனால்தான் தமிழ்மக்களின் தலைவிதியை பெருமளவுக்கு வெளிச் சக்திகளே தீர்மானிக்க முயற்சிக்கின்றன.ஜெனிவாவில் தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்கள். அல்லது,துவாரகா வருகிறார் என்று படங் காட்டுகிறார்கள்.அல்லது தமிழ் மக்களுக்குத் தெரியாமல் ஒரு பிரகடனத்தைத் தயாரித்துவிட்டு,அதைக் கொழும்பில் வைத்து வெளியிடுகிறார்கள்.தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு?

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More