Home இலங்கை இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்? நிலாந்தன்.

இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்? நிலாந்தன்.

by admin

 

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது.  அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் கொங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள். தாயகத்தில் பெரும்பாலான கட்சிகள் அப்பிரகடனத்தை நிராகரித்துவிட்டன.குடிமக்கள் சமூகங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் தமிழரசுக் கட்சி இதுவிடயத்தில் அதன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.பிரகடனம் சம்பந்தரிடம் கையளிக்கப்பட்ட போது அவர் “இந்த முன்னெடுப்பை நாம் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.ஆனால் சிறிதரனைப் போன்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் அதற்கு எதிர்ப்புக் காட்டியிருக்கிறார்கள்.

அப்பிரகடனத்தின் பின்னணியில் சுமந்திரன் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. பிரகடனமானது போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை அரசைக் காப்பாற்றும் உள்நோக்கமுடையது என்று புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன. இலங்கை வரலாற்றில்,மகா சங்கத்தோடு தமிழ்த்தரப்பு கையெழுத்திட்ட முதலாவது உடன்படிக்கை இது. ஆனால் அது நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழ் மக்களால் பெருமளவுக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரகடனக் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் தரும் தகவல்களின்படி, பிரகடனக்குழு நேபாளத்துக்குச் சென்றபோது அதற்கு வேண்டிய வசதிகளை சுவிற்சலாந்து செய்து கொடுத்திருக்கின்றது. அந்த நாட்டின் இலங்கைக்கான தூதரகத்தில் முன்பு அரசியல் செயலராக இருந்த ஒருவர் மேற்படி சந்திப்புக்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருக்கிறார். ஆயின், அந்தப் பிரகடனத்தின் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்கு நாடுகளின் உள்நோக்கங்கள் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

அவ்வாறு ஒரு பிரகடனத்தை உருவாக்குவதால் மேற்கு நாடுகளுக்கு என்ன நன்மை? பிரகடனமானது ரணில் விக்கிரமசிங்க இப்பொழுது முன்னெடுத்து வரும் உண்மை மட்டும் நல்லினக்க ஆணைக்குழுவுக்கு மேலும் பலம் சேர்க்கும். அதாவது அவர் பொறுப்புக்கூறும் விடயத்தில் முன்னேறுவது போன்ற ஒரு தோற்றத்தை அது கட்டியெழுப்ப உதவும்.அதன்மூலம் பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறும் வழிகளை இலகுவாக்கும்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டால் அது ஒப்பீட்டளவில் தமக்கு அனுகூலமானது என்று மேற்கு நாடுகள் சிந்திக்கின்றன.எனவே தேர்தலை நோக்கி ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு உண்டு. போர்க்குற்றங்களுக்கு எதிரான பரிகார நீதியை அழுத்தமாக கேட்பது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள்தான்.இந்த விடயத்தில் கனடாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருக்கின்றது. எனவே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பு ஒன்றை மகா சங்கத்துடன் உடன்பாட்டுக்கு வர வைப்பதன் மூலம் சிங்கள பௌத்தர்களின் பயங்களைக் குறைக்கலாம் என்று மேற்கு நாடுகள் சிந்திக்கின்றனவா?

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யூலி சுங் “சமூகங்களுக்கு இடையேயான புரிதலை விசாலமாக்குவதற்கும்,நீடித்த நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான இந்த முயற்சியை நாங்கள் பாராட்டி வரவேற்கிறோம்” என்று தனது ரூவீற்றறில் எழுதியுள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிஸ் தூதுவர் சிறி வோல்ட் பிரகடனக் குழுவைச் சந்தித்தபின், “இந்தச் சந்திப்பும், ஐக்கியத்திற்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்ட பன்மைத்துவமும் அமைதியும் கொண்ட இலங்கையை உருவாக்கும் முன்னெடுப்பிலான இமாலயப் பிரகடனத்தை ஆதரிப்பதும் எமக்குப் பெருமை தருவதாகும். நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.” என ரூவீற் செய்துள்ளார்.

பொதுவாக மேற்கு நாடுகளில் நல்லிணக்க முயற்சிகளை மகா சங்கம் முழுமனதாக ஆதரித்தது கிடையாது. ஆனால் இமாலய பிரகடனத்தை மகா சங்கம் எடுத்த எடுப்பில் எதிர்க்காததற்குக் காரணம் என்ன? இலங்கையில் மகா சங்கம் எனப்படுவது இலங்கை அரசுக் கட்டமைப்பின் ஒரு பகுதி.அது ஒரு மத நிறுவனம் என்பதை விடவும் அரசியல் நிறுவனம் என்பதே அதிகம் பொருத்தமானது. பல நூற்றாண்டு காலமாக அரசியல் செய்த ஒரு நிறுவனம். அதற்கு வேண்டிய பாரம்பரியமும் அனுபவமும் அவர்களுக்கு உண்டு. அந்த அடிப்படையில் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை பாதுகாப்பதற்கு அவர்களுக்கு இது போன்ற பிரகடனங்கள் தேவை.

பிரகடனக் குழு மல்வத்த பீடத்தை சந்தித்த பொழுது எதிர்பார்த்ததற்கு மாறாக மகாநாயக்கர் அதிகம் சினேகபூர்வமாகப் பழகியதாக பிரகடனக் குழுவினர் தெரிவிக்கின்றார்கள்.பொதுவாக விருந்தாளிகள் வரும் பொழுது மகாநாயக்கர்கள் தமது உதவியாளர்களை பிரித் ஓதுமாறு பணிப்பதுண்டு. ஆனால் பிரகடனக் குழுவுக்காக அவரே பிரித் ஓதியிருக்கிறார்.“கடந்த காலங்களில் கட்சிகளுக்கிடையில் உருவாக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கைகள் இல்லாமல் போவதற்கு வீதிக்கு இறங்கிய பௌத்த பிக்குகள்தான் காரணமென்று தமிழ் பிரதிநிதிகள் கூறியது உண்மைதான்……இனவாதத்தையும் வெறுப்பையும் போதிக்கும் இந்தப் பிக்குகளில் ஒரு சிறுபான்மையினர் உரத்த குரலில் இவற்றைப் பேசி வெற்றி பெற்றனர்.ஏனென்றால் சமாதானத்தையும் சமத்துவத்தையும் விரும்பும் நம்மில் பெரும்பான்மையானவர்கள் அந்தச் சந்தர்ப்பங்களில் போதுமானஅளவு உரத்த குரலில் பேசவில்லை. எதிர்காலத்தில் நாம் அதைச் செய்ய வேண்டும்” என்றும் மகாநாயக்கர் கூறியுள்ளார்.

பௌத்த மகா சங்கங்கள் இதுவரை வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் கருத்துக்களின்படி அவர்கள் இமாலய பிரகடனத்தை எதிர்க்கவில்லை என்பது ஒரு தொகுக்கப்பட்ட அவதானிப்பு.பௌத்த மகா சங்கம் எதிர்க்கவில்லை என்றால்,அது சிங்களபௌத்த கட்சிகளின் முடிவுகளில் பெருமளவு தாக்கத்தைச் செலுத்தும்.அதே சமயம் இப்பிரகடனம் ரணிலைப் பிணையெடுக்கக்கூடியது என்பது எதிர்க்கட்சிகளுக்கு உவப்பானது அல்ல.எனினும் மகா சங்கத்தைப் பொறுத்தவரை அது கட்சி கடந்து சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பை எப்படி பாதுகாப்பது என்றுதான் சிந்திக்கும்.

ஒருபுறம் நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றும் தகமை ரணிலுக்கே இருப்பதாக மகா சங்கம் கருதுகின்றது. எனவே ரணிலைப் பலப்படுத்த இப்பிரகடனம் உதவும்.இன்னொருபுறம்,அவர்களுடைய போர்வெற்றி நாயகர்களான ராஜபக்சக்களையும் படைப் பிரதானிகளையும் பாதுகாக்க வேண்டும். ஏற்கனவே கனடா மூத்த இரண்டு ராஜபக்சக்களுக்கும் படைப்பிரதானிகளுக்கும் எதிராகத் தடைகளை விதித்திருக்கிறது. அமெரிக்காவிலும் நிலைமை இறுக்கமாக இருக்கிறது. சில ஐரோப்பிய நாடுகள் முன்னாள் படைத் தளபதிகளுக்கு விசா வழங்குவதில்லை. கடைசியாக நடந்த ஐநா கூட்டத்தொடரில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் உதவி ஆணையாளர் மேலும் 10 படைத் தளபதிகளைக் குறித்துப் பிரஸ்தாபித்திருந்தார்.எனவே சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகிய படைக்க கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டிய தேவை அதே அரசு கட்டமைப்பின் மற்றொரு பகுதியான பௌத்த மகா சங்கத்துக்கு உண்டு. அந்த அடிப்படையில் இது போன்ற பிரகடனங்களின் மூலம் மேற்கு நாடுகளைத் திருப்திப்படுத்தி,நல்லிணக்க முயற்சிகளைத் தமக்கு பாதுகாப்பான எல்லைக்குள் இருந்தபடி, ஊக்குவித்து, தமது படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க மகா சங்கம் முயற்சி செய்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாமா?

மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்த்தால்,தெளிவாகத் தெரிவது என்னவென்றால், ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாக்க வேண்டிய தேவை மேற்கு நாடுகளுக்கு உண்டு;பன்னாட்டு நாணய நிதியத்துக்கு உண்டு ;பௌத்த மகா சங்கத்துக்கு உண்டு;ராஜபக்சங்களுக்கு உண்டு.எனவே,மேற்கண்ட எல்லாருடைய நலன்களையும் ஒரு பொதுப்புள்ளியில் இணைப்பதற்கு இமாலயப் பிரகடனம் உதவுமா?

அதேசமயம்,உள்ளூரில் உலகத் தமிழர் பேரவைக்கு வேறு ஒரு உள்நோக்கம் இருக்க முடியும் என்று யாழ்ப்பாணத்தில் ஊடக வட்டாரங்களில் ஊகங்கள் உண்டு. சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் இடையே இப்பொழுது இடைவெளி அதிகம். சுமந்திரனுக்கு நெருக்கமான சாணக்கியன் ரணிலின் மீது அளவுக்கு மிஞ்சி வாய்வைத்து விட்டார்.அதனால் இடைவெளி மேலும் அதிகரித்திருக்கின்றது.ஆனால் அடுத்த ஜனாதிபதியாக ரணில் வருமிடத்து, அப்படி ஒரு இடைவெளியை வைத்திருப்பது மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்குப் பாதுகாப்பாக இருக்காது. எனவே சுமந்திரனை ரணிலை நோக்கிக் கொண்டு செல்லும் நோக்கத்தோடு இப்படி ஒரு பிரகடனம் உருவாக்கப்பட்டதா? என்பது அந்த ஊகம். இந்தப் பிரகடனம் அதன் இறுதி அர்த்தத்தில் ரணிலைப் பிணையெடுக்கும்.அவ்வாறு சுமந்திரனுக்கு நெருக்கமான அமைப்பொன்று ரணிலைப் பிணையெடுத்து,அவருடைய நன்மதிப்பை வென்று,அதன்மூலம் சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கலாம் என்று ஒரு விளக்கம் கூறப்படுகின்றது.

இருக்கலாம்.மேற்படி பிரகடனம் ரணிலைப் பிணையெடுப்பதற்கு உதவும் என்பது வெளிப்படையானது.அது மேற்கு நாடுகளின் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலை சிங்கள பௌத்த நோக்கு நிலையிலிருந்து முன்னெடுப்பதற்கும் உதவலாம். போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைப் பாதுகாப்பதற்கு உதவலாம்.சில சமயம் சுமந்திரனுக்கு ரணிலுக்குமிடையில் இடைவெளியைக் குறைக்க உதவலாம்.ஆனால்,தமிழ் மக்கள் தமது அரசியல் இலக்குகளை வென்றெடுப்பதற்கு அது உதவப் போவதில்லை.

 

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More