பொலிஸாருக்கு காணி உறுதிகள் தொடர்பில் போதுமான அறிவு இல்லை என யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் குழுவொன்று முறையிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு கடந்த வாரம் வருகை தந்த ஜனாதிபதி நான்கு நாட்கள் தங்கி இருந்து பல்வேறு தரப்புக்களுடன் சந்திப்பில் ஈடுபட்டு வந்தார்.
அதில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் சிலரை சந்தித்திருந்தார். அதன் போதே சட்டத்தரணிகள் அவ்வாறு முறையிட்டனர்.
சட்டத்தரணிகள் மேலும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் காணி மோசடிகள் பரவலாக இடம்பெற்று வரும் நிலையில் , உறுதிகளை நிறைவேற்றும் நொத்தாரிசுகளை குறிப்பாக நொத்தாரிசாக கடமையாற்றும் சட்டத்தரணிகளுடன், பொலிஸார் கண்ணியமான முறையில் நடந்து கொள்வதில்லை.
குறுகிய கால அவகாசம் வழங்கி விசாரணைக்கு அழைக்கின்றனர். அதனால் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் முன் பிணை கோரி, முன் பிணை பெற்றே தமது கடமைகளை தொடர்கின்றனர்.
காணி உறுதிகள் தொடர்பில் பொலிஸாருக்கு போதிய அறிவு மற்றும் புரிதல் இல்லாத நிலைமையிலையே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைத்தனர்.
இதேவேளை யாழில் காணி மோசடி சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது , அது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வரும் நிலையில் , பொலிஸாரால் தாம் கைது செய்யப்படுவதனை தடுக்கும் வகையில் , ஐந்து சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன் பிணை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.