இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜேவிபி மற்றும் தேசிய மக்கள் சக்த்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது எங்கள் இருதரப்பு உறவுகள் குறித்தும் அதனை மேலும் வலுப்படுத்துதால் உருவாகக்கூடிய பரஸ்பர நன்மைகள் குறித்து இந்த சந்திப்பின்பொது ஆராயப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையின் பொருளாதார சவால்கள் முன்னோக்கிய பாதை குறித்தும் ஜேவிபி தலைவருடனான பேச்சுவார்த்தைகளின் போது ஆராயப்பட்டதுடன் இந்தியா தனது அயல்நாட்டிற்கு முதலிடம் என்ற கொள்கை காரணமாக இலங்கையின் நண்பனாகவும் நம்பகதன்மை மிக்க சகாவாகவும் விளங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சந்திப்பிற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவினர் இன்று காலை இந்தியாவிற்கு சென்றிருந்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் இந்த பயணத்தில் இணைந்துக்கொண்டனர்.
இதேவேளை இந்திய – இலங்கைக்கு இடையிலான சமாதான உடன்படிக்கை மற்றும் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இலங்கையில் மாகாண சபை முறைமை ஆகிய விடயங்களில் கடந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.
எனினும் சிறந்த தொலைநோக்கு பார்வையுடன் இந்தியாவுடன் செயற்பட தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்னதாக தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு அனுரகுமார திஸாநாயக்க தீர்மானித்துள்ள அதேவேளை இலங்கை மக்களின் கணிசமான ஆதரவும் அனுரகுமார திஸாநாயக்கவிற்குக் கிடைத்துள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவித்திருந்தன.
இதன் அடிப்படையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட குழுவினரை இந்திய அரசாங்கம் அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டு மக்களுக்கு தற்போது இரண்டு பாதைகளே உள்ளன. பழைய வீதியில் சென்று படுகுழியில் விழுந்து புதைந்து போகலாம். அவ்வாறு இல்லையென்றால் புதிய பாதையில் சென்று மீண்டெழுந்து கொள்ளலாம். நாம் புதிய மறுமலர்ச்சியை உருவாக்குவோம். அது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த காத்திருக்கிறோம். எம்மால் முடிந்தவற்றை நாம் செய்வோம். எமக்கு முன்னால் உள்ள எதிரிகள் எமக்கு முக்கியம் அல்ல. நாம் தோல்வியடைந்தாலும் அடுத்த நாளிலிருந்து அரசியலில் ஈடுபடுவோம். 98 வருடங்கள் தமது குடும்பம் அரசியல் செய்வதாக நாமல் கூறியதைக் கேட்டேன். அதன் மூலம் அவர் எதனை கூறுகின்றார். தந்தையிடத்தில் இருந்து மகனுக்கும் மகன் இடத்திலிருந்து தந்தைக்கும் வழங்கப்படும் அரசியலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அரசியலில் தோல்வி அடைந்தால் எமக்கு ஒன்றும் கிடைக்க போவதில்லை. எனினும் அவர்கள் சில விடயங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இலங்கையில் இதுவரையில் 8 ஜனாதிபதிகள் பதவி வகித்துள்ளனர். அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். சந்திரிக்காவும் மைத்திரியும் மஹிந்தவும் கோட்டாவும் ஒரே மேடையில் அல்லவா நிற்கிறார்கள்” என அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில், இலங்கை புதிய தலைமைத்துவத்திற்கு மாறவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி சுதந்திரத்தின் பின்னர் சிங்கப்பூரும் இலங்கையும் பின்பற்றிய அணுகுமுறைகளில் உள்ள வித்தியாசங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர், சிங்கப்பூர் ஐக்கியத்திற்கும் தனது மக்களின் நலனிற்கும் முக்கியத்துவம் கொடுத்தது என்றும், இலங்கையின் தலைமைத்துவம் மதமொழி அடிப்படையில் சமூகங்களை பிரித்ததை கடுமையாக கண்டித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.