இலங்கையின் 76 சுதந்திரதினத்தன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்களிற்கு எதிராக காவற்துறையினர் சட்டவிரோத பலத்தை பயன்படுத்தியது குறித்தும் கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பாகங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஒடுக்குமுறை குறித்தும் கரிசனை கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக காவற்துறையினர் கண்ணீர்புகைப்பிரயோகத்தை மேற்கொண்டதுடன் நீர்த்தாரை புகைபிரயோகத்தையும் மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை வீதிகளில் இழுத்துச்சென்றனர். யாழ்பல்கலைகழக மாணவர்கள் சிலரை கைதுசெய்தனர் எனவும் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அதிகாரிகள் உடனடியாக ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரானஇந்த கடுமையான நடவடிக்கைகளை அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் பழிவாங்கல்களை நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.