2024 ஆம் ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திர குறிகாட்டியை, எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளதுடன் அதில் இலங்கை 150 ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு இலங்கை 135 ஆவது இடத்தில் காணப்பட்டது.
இலங்கையில் பத்திரிகை சுதந்திர விடயங்கள் 2009 ஆம் ஆண்டுவரை நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தததுடன் தொடர்பு பட்டிருந்தாக எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போது பல பத்திரிகையாளர்களிற்கு எதிராக இடம்பெற்ற குற்றங்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படாத நிலையே காணப்படுவதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் இரண்டரை கோடி மக்கள் வசிக்கின்ற நிலையில் தற்போதும் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியாகவே உள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையில் பல ஊடகவியளார்கள் கொல்லப்பட்டும் பல ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.
ஆனால் இவற்றுக்கு இன்றுவரை எந்தவொரு நீதியையும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் வழங்கவில்லை.
இந்தநிலையில், நாட்டிலுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் திட்டமிட்ட முறையில் கண்காணிக்கப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரையில் ஆயிரத்து 668 ஊடகவியலாளர்கள் சர்வதேச ரீதியில் கொல்லப்பட்டுள்ளதாக எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது. இலங்கையை பொறுத்தவரை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலேயே 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.
இதேவேளை சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று, கடைப்பிடிக்கப்படுகின்றது.
பூமிக்கான ஊடகம் – சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொள்ளும் பத்திரிகை எனும் கருப்பொருளில் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஊடக சுதந்திரதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.