லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. அதனால் ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாளை மாலை நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.
நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் மோடி பதவியேற்கிறார். மறுபுறம் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சி பணிக்காக தன்னை தயார்படுத்தி வருகிறது. குறிப்பாக காங்கிரஸ், தரப்பிலிருந்து ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து தற்போது சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.