கர்ணன் படைப்பகத்தால் நடத்தப்பட்ட பாடல் மற்றும் தனி நடிப்பு போட்டிக்கான பரிசளிப்பு வைபவம் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
கர்ணன் படைப்பகத்தின் நிர்வாகி சபேசன் சண்முகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் வணிக மற்றும் முகாமைத்துவ பீடங்களின் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜாவும், சிறப்பு விருந்தினர்களாக நடிகர், பாடகர் மற்றும் சமயப்பேச்சாளரான ஞான ஏந்தல் பரமேஸ்வரன், வலி. வடக்கு பிரதேச சபை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஜனனி ஆனந்தன் மற்றும் Betta College நிர்வாக இயக்குனர் ரஜீவ் பரமானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் முதல் மூன்று இடங்களையும் பிடித்தவர்களுக்கு வெற்றிக்கேடயத்துடன், சான்றிதழ் மற்றும் பணப்பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. முதல் 10 இடங்களைப் பிடித்த ஏனையவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
பாடல் போட்டியில் முதல் இடத்தை திருகோணமலையைச் சேர்ந்த அபிநயா ரவீந்திரனும், இரண்டாமிடத்தை நுவரெலியாவைச் சேர்ந்த மதுரா பரசுராமும், மூன்றாமிடத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜூட் ஷெரோனும் பெற்றுக் கொண்டனர்.
தனி நடிப்புப் போட்டியில் முதல் இடத்தை நுவரெலியாவைச் சேர்ந்த ஜி.சிவராமனும், இரண்டாம் இடத்தை இரத்தினபுரியைச் சேர்ந்த நிரோஷாவும் மூன்றாமிடத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.துவாரகனும் பெற்றுக் கொண்டனர்.