Home இலங்கை நினைவுகளில் தமிழறிஞர்: பகுதி- 2 – நாவலர் கல்விப் பரம்பரையில் ஒருவர்!

நினைவுகளில் தமிழறிஞர்: பகுதி- 2 – நாவலர் கல்விப் பரம்பரையில் ஒருவர்!

க. உமாமகேசுவரம்பிள்ளை (05.05.1934 – 20.04.2024) - பா. துவாரகன்!

by admin

 

உமாமகேசுவரன்என்ற பெயர்க் காரணம்

இவரது தந்தை பண்டிதர் சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை தெல்லிப்பழையைச் சேர்ந்தவர். தாயார் கனகசபை சுந்தரம் ஆவரங்காலைச் சேர்ந்தவர்; எஸ்.எஸ்.சி சித்தியடைந்தவர். அக்காலத்தில் பெரும்பாலான பிரசவங்கள் வீட்டிலே நிகழ்வது வழமை. 1934.05.05 அன்று உமாமகேசுவரன் ஆவரங்காலில் தாயாரது வீட்டிலே பிறந்தார். பிரசவத்துக்கு உதவியவர் மிஸ் டோர். இவர் குதிரை வண்டியில் வீடுகளுக்குச் சென்று கர்ப்பவதிகளைப் பார்வையிடுவார். உமாமகேசுவரனுக்கு இரு சகோதரிகள்; அமரர் பவளநாயகி அம்மை, சாரதாம்பிகை. சகோதரர் தமிழறிஞர் ஜெகதீஸ்வரம்பிள்ளை; இலண்டனில் வசிக்கின்றார்; கலசம் சஞ்சிகையின் ஆசிரியர்.

‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ என்ற  மனோன்மனீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக  அறிமுகப்படுத்தியவரும் தஞ்சாவூரில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்து 30 ஆண்டுகள் அதன் தலைவராய் விளங்கியவருமான  தமிழ்வேள்  வே. உமாமகேசுவரன் அவர்களுக்கும் இவரது தந்தையார் பண்டிதர் கதிரிப்பிள்ளை அவர்களுக்குமிடையே நட்பிருந்தது. பண்டிதர் கதிரிப்பிள்ளை தமிழ்வேள் வே. உமாமகேசுவரன் அவர்களிடத்துக் கொண்ட அபிமானம் காரணமாக தமது மூத்த புதல்வருக்கு உமாமகேசுவரன் என்று பெயரிட்டார்.

பாடசாலைக் கல்வி

குமாரசுவாமிப்புலவருடைய மாணவர் வேதாரண்யம் என்ற தமிழறிஞரே உமாமகேசுவரனுக்கு ஏடுதொடக்கியவர். தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் எழுதப்பட்ட ஏட்டைக் கொண்டு கல்வியங்காடு சைவ வித்தியாசாலையில் உமாமகேசுவரனுக்கு வித்தியாரம்பம் செய்தனர்.

இவரது சிறிய தாயாராகிய நாகம்மா கல்வியங்காடு சைவ வித்தியாசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றியவர். முதலாம் தரத்துக்கு அனுமதிக்கு முன்னரே சிறியதாயாருடன் சைவ வித்தியாசாலைக்குச் சென்று கற்று வந்தார். முதலாம் தரத்தை இங்கு நிறைவு செய்த பின்னர் விழிசிட்டி தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் 2 முதல் தரம் 5 வரை கற்றார். இங்கு இவரது அப்பா கதிரிப்பிள்ளை தலைமையாசிரியராக இருந்தார். உதவியாசிரியர்கள் அத்தனைபேரும் அப்பாவுடைய மாணவர்கள். சிறுவனான உமாவுக்கு எத்தகைய சிறப்பான ஆரம்பக்கல்வி கிடைத்திருக்கும்!

பின்னர் தெல்லிப்பழை மகாஜன ஆங்கில உயர்தரப் பாடசாலையில் ஒரு வருடம் கற்கிறார். இதனை 1ஆம் வருடம்(1st Year) என்று சொல்வார்கள். முதலாம் வருட நிறைவில் இவரது தாயார் இறந்ததால் சிறுவனாகிய உமாமகேசுவரன் வீட்டிலிருந்தால் தினமும் தாயை நினைத்துக் கவலைப்படுவான் என்று தந்தையார் கருதி தனது உறவினரான ஆ. கனகசபை கற்பித்த புசல்லாவைக்கு அனுப்புகின்றார். இங்கு சரஸ்வதி வித்தியாசாலையில் 2 ஆம் வருடம் கல்வியைத் தொடர்கின்றார். பின்னர் பரமேஸ்வரக் கல்லூரியில் சேர்கின்றார். எச்.எஸ்.சி வரை பரமேஸ்வரவில் பயின்றார். இங்கு நவநீதகிருஷ்ண பாரதியாரிடம் கற்கும் பேறுற்றார். பின்னர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குச் சென்று ஆங்கில ஆசிரிய பயிற்சியைப் பெற்றார்.

நாவலர் கல்விப் பாரம்பரியம்

யாழ். பல்கலைக்கழகத்தில் 1991୵92 கல்வியாண்டில் பயின்ற செல்வி சுகவாணி ஆறுமுகம் தனது முதலாம் ஆண்டுக் கல்வியைப் பூர்த்தி செய்யும் பொருட்டு இலக்கிய கலாநிதி பண்டிதர் மு.கந்தையா அவர்களைப் பேட்டி காண்கின்றார். அதிலே ஒரு கேள்வி, “இன்றுள்ள அறிஞர்களில் யார் யாரை நாவலர் கல்விப் பரம்பரையினராகக் கருதுகின்றீர்கள்?” இவ் வினாவுக்கு பண்டிதர் மு. கந்தையா பின்வருமாறு விடை பகன்றார்:

“இதைச் சிந்திக்கையில், நாவலர் கல்விப் பரம்பரையின் பண்பு என்ன என்பதை முதலிற் குறித்துக் கொள்ள வேண்டும். அறிவியல் விற்பத்தி பெறும் உண்மையான ஆவலோடு உயர்ந்த அறிவு நூல்களை விரும்பிக் கற்றலும் கற்றற்கநுகுணமான அறிவாசார சீலங்களொடு வாழ்தலும் கற்றவற்றைப் பொருளாதார நோக்கின்றி அர்ப்பண புத்தியோடு, ஒழுக்கமுடையோரைத் தெரிந்து கற்பித்தலும் நாவலர் கல்வி மரபுப் பண்பாகும். அவ்வகையில் கணேசையரின் தலை மாணாக்கர் இலக்கண வித்தகர் இ. நமசிவாய தேசிகரும் அவரை அபிமான ஆசிரியராகக் கொண்டிருக்கும் பண்டிதர் க. உமாமகேசுவரம்பிள்ளை, பண்டிதர் ச. பொன்னுத்துரை என்ற இருவரும் நாவலர் கல்விப் பாரம்பரியத்தில் நிற்பவர்களாக என் அறிவிற்படுகிறது. அறிஞர்கள் எல்லார் விவரமும் எனக்கு எட்டாமையால் அவ்வகையில் வேறு ஒருவரும் இல்லை என்றுஞ் சொல்ல முடியாது.  எவராயினும் மேற்குறித்த கல்வி மரபுப்பண்புள்ளவர் அப்பரம்பரையினராகக் கொள்ளப்படலாம்.”

உமாமகேசுவரன் நாவலர் கல்விப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதற்கு பிறிதோர் விதமாகவும் நாம் விளக்கங் கூறலாம். உமாமகேசுவரனது தமிழறிவுக்கு அத்திவாரம் இட்டு அதனை வளர்த்தவர் தந்தையார் கதிரிப்பிள்ளை; இவர் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவரின் மாணாக்கர்; புலவர் ஆறுமுகநாவலரிடம் முறைப்படி கற்றவர்.

உமாமகேசுவரன் நாவலர் வழிநின்று பயன்கருதாது தாம் கற்றவற்றை நன்மாணாக்கர்களுக்குக் கற்பிக்கும் நோக்குடன் கல்விக் கழகம் ஒன்றை நிறுவ விரும்பினார். 1991.05.24 அன்று கதிரிப்பிள்ளை கலைதெரி கழகத்தைத் தெல்லிப்பழையில் இவர்களது வீட்டுக்கு அருகே இருந்த விழிதீட்டி ஞானவைரவர் ஆலயத்தில் ஆரம்பித்தார். இதனை ஆரம்பித்து வைத்தவர் இலக்கண வித்தகர் இ.நமசிவாயதேசிகர். இங்கு பண்டிதர் க. உமாமகேசுவரன், ஆசிரியர் செ. சிவசுப்பிரமணியம், இ. நமசிவாயம், சைவப்புலவர் கலாபூசணம் சு. செல்லத்துரை, புலவர் ம. பார்வதிநாதசிவம் ஆகியோர் கற்பித்தனர். ஏறத்தாழ ஒரு வருடத்துக்கு மேல் விழிசிட்டியில் இயங்கிய கதிரிப்பிள்ளை கலைதெரி கழகத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் பயின்றனர். ஒரு வருட நிறைவின் பின்னர் இடப்பெயர்வு காரணமாக பின்னர் அளவெட்டியிலும் தொடர்ந்து சுன்னாகத்திலும் வகுப்புக்கள் நடைபெற்றன. உமாமகேசுவரன் கொக்குவில் பூநாறி மரத்தடியில் வசித்த காலத்தில் இவரது இல்லத்துக்குப் பலர் வந்து கற்றனர். இவர்களில் கோப்பாய் கல்வியியற் கல்லூரி முன்னாள் விரிவுரையாளர் முருகேசு கௌரிகாந்தனும் ஒருவர். யாழ். பல்கலைக்கழக நூலகராகக் கடமையாற்றிய விமலா வேல்தாஸ் மற்றொருவர். ஏனையவர்களது பெயர்களை அறியமுடியவில்லை. இக்காலப் பகுதியில் உமாமகேசுவரன் நல்லை ஆதீனத்திலும் கற்பித்து வந்தார். பின்னர் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் தமிழ்ச் சங்கத்தில் பாடம் எடுத்தார்; வீட்டிலும் வந்து கற்றனர்.

திரு. முருகவேள் மகாசேனன் பண்டிதர் உமாமகேசுவரனிடம் நன்னூல் முழுவதையும் முழுமையாகக் கற்றவர்களில் ஒருவர்.

சொல்லும் பொருளும் செயலும்

உமாமகேசுவரன், “எனது முதல் ஆசிரியர் அப்பா தான்” என்பார்; “தெல்லிப்பழையில் பிறந்ததும் அப்பாவுக்கு மகனாகப் பிறந்ததும் தவம்” என்று கூறாத நாளில்லை. சிறுவயதிலே வீட்டிலே விளையாடிக் கொண்டிருக்கும் போது அப்பா கூப்பிட்டு கிராமபோன் இசைத்தட்டில் ஒலிக்கும் பாடலை, இது என்ன இராகம் தெரியுமோ என்று கேட்பார். தெரியாவிட்டால் இரு என்று கூறி சொல்லித்தருவார். நான் அப்பாவிடம் இன்னும் எவ்வளவோ கேட்டுப் படித்திருக்கலாம்” என்று உமாமகேசுவரன் தனது இறுதிநாள்களிலும் கவலையுடன் கூறுவார். தமிழை மட்டுமன்றி சங்கீதத்தையும் இராகங்களை வேறுபடுத்தி அறியும் ஆற்றலையும் அப்பாவிடமிருந்தே பெற்றார்.

“கிணற்றிலே பட்டையால் இறைக்கும் போதும் , கிடுகு பின்னும் போதும் அப்பாவிடம் படித்தவை பல. நூறு விடயங்கள் செய்வது முக்கியமல்ல ஒரு பிழை விடாமல் இருப்பது தான் முக்கியம்” என்று அப்பா அடிக்கடி சொல்வார். ஒரு விடயத்தைபற்றி எழுதினாலோ அல்லது சொற்பொழிவு ஆற்றினாலோ அவர்கள் அதிலே கவனமாக இருப்பார்கள். பிழை கண்டு பொறுக்க மாட்டார்கள்.  வாழ்க்கையிலும் அப்படித்தான். “இது குமாரசுவாமிப் புலவரிடம் அப்பா கற்றுக் கொண்டது. அப்பா ஒரு நாளும் குமாரசுவாமிப்புலவரை பெயர் சொல்லி அழைத்ததில்லை. “புலவர்” என்றுதான் அழைப்பார். எங்கு பேசப் போனாலும் அல்லது ஒரு கட்டுரை எழுதினாலும் ஆதாரம் இல்லாமல் ஏதும் சொல்லக் கூடாது என்றும் ஒன்றைப் பற்றி பேசினாலோ அன்றி எழுதினாலோ ஒருவர் அதிலே கேள்வி (இது பிழை என்று) கேட்கக் கூடாது என்று அப்பா (கதிரிப்பிள்ளை) கூறுவார்.

ஆசிரியப்பிரான் உமாமகேசுவரன் சில திருக்குறள் வெண்பாக்களை எனக்கு அவ்வப்போது நினைவூட்டுவார். அதிலே ஒன்று பின்வருமாறு:

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை
வெல்லுஞ்சொ லின்மை யறிந்து.    (645)

இதன் பொருள்: தாம் சொல்லக் கருதிய சொல்லை வெல்லவல்ல சொல்லாகிய வேறொரு சொல் இல்லாமையைத் தெரிந்து அச்சொல்லை சொல்லக் கடவர்.

(தொடரும்)

 

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More