யாழ்ப்பாணம் தென்னாடு – செந்தமிழ் ஆகம சிவ மடத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சைவ அறங்காவல் என்ற பொருளில் அமைந்த முழு நாள் கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
தென்னாடு அமைப்பின் நிறுவுனர் பொறியாளர் குணரத்தினம் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு தென்னாடு பத்திரிகை ஆசிரியர் செந்தமிழாதன் தலைமை தாங்கினார்.
தருமபுரம் ஆதீனத்தின் திருக்கேதீச்சரக் கிளைமட கட்டளை தம்பிரான் ஸ்ரீமத் மீனாட்சி சுந்தர தம்பிரான் சுவாமிகள், யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி சிறீசற்குணராஜா சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகியோர் நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் கருத்துரைகளை இலங்கையில் சைவம் அன்றும் இன்றும் என்ற பொருளில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசனும், சைவத்தின் சமகால செல்நெறி – சில அவதானிப்புகள் என்ற பொருளில் கொழும்பு ஆறுமுகநாவலர் சபை செயலாளர் மருத்துவர் கி. பிரதாபனும் திருமுறைச் சிறப்பும் சாத்திரச் சிறப்பும் என்ற பொருளில் தமிழ்நாடு செந்தமிழரசு கி சிவகுமாரும் சைவ அறங்காவல் என்ற பொருளில் பொறியியலாளர் குணரத்தினம் பார்த்தீபனும் திருமுறை மகத்துவம் என்ற பொருளில் சைவநீதி அமைப்பின் தலைவர் குணா துரைசிங்கமும் கருத்துரைகளை வழங்கினர்
வடக்கு ,கிழக்கு , மலையகம், கொழும்பு என இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளையோர் இக்கருத்தரங்கில் பங்கு பற்றி பயன்பெற்றனர். நிகழ்வில் பங்குபெற்றோருக்கு தென்னாடு பத்திரிகை விபூதி பொட்டலங்கள் மற்றும் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன