யாழ்ப்பாணத்தில் புகையிரதத்தில் இருந்து டீசல் திருடிய கும்பல் ஒன்று தப்பி சென்றுள்ள நிலையில், திருடப்பட்ட 80 லீட்டர் டீசல் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 09ஆம் திகதி இரவு புகையிரத நிலைய அதிகாரிகள் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் தரித்து நின்ற புகையிரததங்களை கண்காணித்த போது , புகையிரத இயந்திரத்தில் இருந்து திருட்டு கும்பல் ஒன்று டீசல் திருட்டில் ஈடுபட்டிருந்ததை கண்ணுற்று அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அவர்கள் தப்பி சென்றுள்ளனர்.
அந்நிலையில் அவர்கள் கொண்டு வந்திருந்த 20 லீட்டர் கொள்வனவு உடைய 04 கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்ட நிலையில் அதனை கைவிட்டு தப்பி சென்றிருந்தனர். அதனை அடுத்து அவற்றினை அதிகாரிகள் மீட்டு இருந்தனர்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் தரித்து நிற்கும் புகையிரதத்தில் இருந்து தொடர்ச்சியாக டீசல் திருடப்பட்டு வந்தமையாலையே, அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்ததாகவும், அந்நிலையிலையே 09ஆம் திகதி டீசல் திருடியவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அவர்கள் தப்பி சென்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் , வடக்கு நோக்கி வரும் புகையிரதங்களுக்கு அநுராதபுரத்தில் டீசல் நிரப்பப்படுவதாகவும் , அதனால் புகையிரத டீசல் தாங்கியின் திறப்பு அநுராதபுரத்தில் உள்ளதாகவும் , அவ்வாறு இருக்கும் நிலையில் , காங்கேசனத்துறையில் டீசல் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தமையால் , புகையிரத நிலைய ஊழியர்களும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டு இருக்கலாம் எனும் சந்தேகத்தில் திணைக்கள ரீதியான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.