மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவினரால் கடந்த 27,28.07.2024ஆம் திகதி மாமாங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் நடாத்தப்பட்ட “நன்னிலம்” – (உள்ளூர்த் தாவரங்களை மீட்டெடுத்தலும் பரவலாக்குதலும்) மரபார்ந்த மரக்கன்றுகள், செடிகள், கொடிகள், விதைகளின் அறிமுகமும் பகிர்வுக்குமான சந்திப்புக்களம் செயற்பாட்டில் எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்த மண்டூரைச் சேர்ந்த பொன்னையா பரமானந்தராசா அவர்கள், அங்கு வருகை தந்தவர்களுக்கு எங்கள் உள்ளூர் தாவரங்கள் பற்றிய பல கருத்துக்களை அவர் பெற்ற அனுபவங்கள் ஊடாக பகிர்ந்தது மட்டுமல்லாது மண்டூர் முருகன் ஆலயத்திலும் “நன்னிலம்” – உள்ளூர்த் தாவரங்களை மீட்டெடுத்தலும் பரவலாக்கலும் செயற்பாட்டினை நடாத்த வேண்டும் என்கின்ற அவரது ஆசையினை கூறியிருந்தார்.
தற்போது 77 வயதையடைந்த அவரது உடல் ஆரோக்கியத்திற்கு நாங்கள் அறிந்தும் அறியாமலும் கால்களால் மிதித்துச் செல்லும், எங்கள் நிலங்களில் இயல்பாக வளருகின்ற புல்,பூண்டு, செடி,கொடிகள், உணவாக, மருந்தாக உண்ணும் இலைகள், பழங்கள், கிழங்குகள்தான் காரணம் என்பதில் உறுதியாக இருக்கும் இவர், எங்கள் சமூகத்தின் இன்றைய இளம் சந்ததிகளின் இயற்கையை அழிக்கும் செயற்பாடுகளினால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் உணர்ந்து, இன்றைய காலத்தில் மருந்து வில்லைகள்கொண்ட பையுடன் நடமாடும் மனிதர்களே அதிகமாக இருக்கின்ற நிலையினையினையும் அறிந்து, எங்கள் மண்ணில் ,நிலத்தில் இயல்பாகவே எங்களுக்கான ஆரோக்கியத்தை வழங்கும் தாவரங்களை அறியப்பண்ணுதலும், சிந்திக்கப்பண்ணுதலும் அவசியம் என்பதை மண்டூர் கந்தன் ஆலயத்திற்கு வரும் பக்தர்களும் அறிந்து தன்னைப்போன்று ஆரோக்கியமான வாழ்வு வாழவும், எங்கள் உள்ளூர் தாவரங்கள் பற்றி அறியவும், சிந்திக்கவும் வேண்டும் என்கின்ற அவாவில் ஆலய வண்ணக்கர்களுடன் உரையாடி செயற்பாட்டிற்கான ஒழுங்குகளை செய்துதந்தார்.
அதன்படி 16.08.2024ஆந் திகதி நடைபெற்ற “நன்னிலத்தின்” எங்கள் உள்ளூர் மூலிகைகள், மரங்கள், புல், பூண்டு, செடிகள், கொடிகளின் கண்காட்சியும் கலந்துரையாடலும் விழிப்புணர்வு செயற்பாடு காலை10.00மணிக்கு ஆரம்பமாகி இரவு10.00மணிவரை நடைபெற்றது. அதில் இரு தடவைகள் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் கலாசாரக் குழுவினரால் “எழுத்தாணி” நாடக ஆற்றுகையும் இடம்பெற்றிருந்தது. சிறுவர்களுக்கு உள்ளூர் தாவரங்கள் பற்றிய அறிமுகமும் அதனை ஓவியங்களாக வரைவதற்கான வாய்ப்பினையும் வழங்கியதோடு, இயற்கையோடு இணைந்து வாழ்தல் பற்றிய பாடல்களும் (மூன்றாவது கண் நண்பர்களால் உருவாக்கப்பட்ட) கிழக்கு பல்கலைக்கழக (சு.வி.அ.க.நி) இசைத்துறை விரிவுரையாளரும் நண்பியுமான பிறிசில்லா ஜோர்ச் அவர்களின் வழிப்படுத்தலில் இடம்பெற்றது. சிறுவர்களுடன் இயற்கை வர்ணங்களால் சித்திரம் வரைதல் செயற்பாட்டில் வி.ஜதீஸ்குமார் நண்பரும் செயற்பட்டார்.
ஒழுங்குபடுத்தல்களுக்கு உதவியாக திராய்மடுவைச் சேர்ந்த சாதாரண தரத்தில் கல்வியிலும் பாலசிங்கம் சஜித் தம்பியும் , கிழக்குப் பல்கலைக்கழக மாணவியும் மண்டூரைச் சேர்ந்தவருமாகிய கோபாலகிருஷ்ணன் டினுஜா நண்பியும் இருந்தனர். ஆலயத்தை சேர்ந்த வண்ணக்கர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் ஆதரவு வழங்கி பல்வேறு உதவிகள்(அனுமதி, உணவு, இட ஒதுக்கீடு) செய்திருந்தனர். டினுக்சனாவின் குடும்பத்தாரும் பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தனர். மூன்றாவது கண் நண்பர்கள் குடும்பங்களுடன் வருகை தந்து இரவு முழுவதும் எங்களுடன் உதவியாக இருந்தனர்.
இத்தனை நபர்களின் உதவியுடன் நடைபெற்ற செயற்பாட்டில் மண்டூர் முருகன் உருவான இடத்தை (இயற்கை வளமாக அமைந்த புல், பூண்டுகள், மரங்கள், செடிகள், கொடிகள், கிழங்குகள், பழங்கள் வளர்ந்துள்ள காட்டினை) ஞாபகமூட்டிய “நன்னில” காட்சியினை ஒரு விடயமாகவே எண்ணாத பல பக்தர்களை பார்க்க முடிந்தது. அதுமட்டுமல்ல யார் என்ன செய்தாலும் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கும் சமூகமாக எங்கள் சமூகம் மாறியுள்ள நிலமையையும் உணர முடிந்தது. இவை கவலையைத் தந்தபோதும் ஒரு சில பக்தர்கள் இத்தகைய செயற்பாடுகள் கட்டாயம் இன்றைய சூழலுக்கு தேவை என்றும் ஒவ்வொரு கிராமங்களிலும் எங்கள் உள்ளூர் தாவரங்களை கொண்டதான தோட்டம் உருவாக்கப்பட வேண்டும். என்கின்ற கருத்துக்களையும் கூறியிருந்தனர். மண்டூரில் எங்கள் செயற்பாடு சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றிகள்.