Home இலங்கை ஆச்சரியங்கள் நிறைந்த மன்னார் மாந்தை சோழமண்டல குளம்

ஆச்சரியங்கள் நிறைந்த மன்னார் மாந்தை சோழமண்டல குளம்

by admin
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சோழமண்டல குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடப்பெயர்களின் தன்மைக்கேற்ப சோழர்களாலும் அதற்கு முந்தைய காலத்தில் பண்டைய தமிழர்களாலும் ஆட்சி செய்யப்பட்டு வந்திருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியின் சில முக்கியமான இடங்களில் தொல்லியல் தொடர்பான கள ஆய்வு பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்   தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(8) நடைபெற்றது.

மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் அவர்களின் ஒழுங்கமைப்பிலும் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் மா.ஸ்ரீஸ்கந்த குமார் அவர்களின் தலைமையிலும் மன்னார் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் அவர்களின் வழி நடத்தலிலும் இந்த கள ஆய்வானது நேற்றைய தினம் (8) காலை 10 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கள ஆய்வின் போது  தமிழர்களின் வாழ்வியல் தொடர்பான பல  விதமான சட்டி ,பானை, ஓட்டுத் தண்டுகள் சேட் எனப்படும் கல் இரும்புத் தாது பெறக் கூடிய கற்கள் போன்ற பல சான்றுப் பொருட்கள் நிலத்தின் மேல் பகுதியில்  மேலதிக ஆய்வுளகுள்ளாக  எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த தொல்லியல் கள ஆய்வில் முன்னாள் தொல்லியல் துறை விரிவுரையாளர் கந்தசாமி கிரிகரன் மன்னார் ஊடகவியலாளர் ஜெகன் மற்றும் இலுப்பைக்கடவை கிராமத்தைச் சார்ந்த  பலரும் கலந்து கொண்டனர்.

இந்த தொல்லியல் கள ஆய்வு தொடர்பாக பேராசிரியர் புஸ்பரெட்ணம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,,,

இரண்டு வாரங்களுக்கு முன்னர் மன்னார்  சோழமண்டல குளத்தை பற்றியும் அங்குள்ள காணி பிரச்சினைகள் பற்றியும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தது.
 நான் காணி பிரச்சனைகளைப் பற்றி சிந்தித்ததை விட சோழமண்டல குளம் என்னும்  பெயர் என்னை ஆச்சரியத்திற்கு  உட்படுத்தியது. ஏனென்றால்  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் மண்டலம்,நாடு ,வளநாடு பற்று என்று நிர்வாக பிரிவுகளை ஏற்படுத்தியே ஆட்சி செய்து வந்திருந்தார்கள்.
 அதில் மாதோட்டம் அருண்மொழித் தேவ வளநாடு என்று அழைக்கப் பட்டதை மாதோட்டத்தில் கிடைத்த  கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.
தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லவராயர் கல்வெட்டு மட்டிவாள் என்ற இடம் பற்றி சொல்லுகின்றது.  அது மட்டுவில் நாடு என்று பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
இப்பொழுது இங்கே வந்த மன்னார் வந்த பொழுது பற்று  என்னும் நிர்வாகப் பெயர்கள் இங்கு இருப்பதையும் நான் அறிந்து கொண்டேன். அதே நேரத்தில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூளவம்சம் என்னும் பாலி இலக்கியமும் ராஜாவளி என்ற சிங்கள இலக்கியமும் இந்த சோழமண்டலம் அமைந்த பிரதேசத்தை குறிப்பிட்டு அங்கே கலிங்க அரசின்  ஆதிக்கம் நிலவி  இருந்தது என்று கூறியிருக்கிறது.

இந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் தொகுத்து பார்த்த பொழுது சோழ மண்டல  குளம் பற்றிய இடத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விருப்பம் எனக்கு ஏற்பட்டது .

இதற்கு மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் ,மன்னார் உதவி  அரசாங்க அதிபர் ஸ்ரீஸ் கந்தகுமார் மன்னார் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ,ஊடகவியலாளர் ஜெகன் போன்றவர்களின் உதவி ஆதரவோடும்  எனது மாணவனும்  பல்கலைக்கழகத்தில் தொல்லியல் விரிவுரையாளராக இருந்த கிரிகரன் மற்றும்  கள ஆய்வு நடைபெற உள்ள பிரதேச அன்பர்களின் ஒத்துழைப்போடும்  நாங்கள் சோழமண்டல குளத்தையும்  குளத்தை சுற்றியுள்ள பல இடங்களையும் ஆய்வு மேற் கொண்டோம்.
கள ஆய்வின்  போது  இந்தப் பிரதேசமானது இலங்கையின் ஏனைய பிரதேசங்களை விட ஒரு பல்லின சமூகம் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருந்த இடம் என்பதை என்னால் அடையாளப்படுத்தப் படக் கூடியதாக இருந்தது.

இங்கே பரங்கியர் குளம் பரங்கிய காமம் காணப்படுகிறது. இவை 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் வட இலங்கை மீது படையெடுத்த போது மன்னார் மாவட்டம் அவர்களுடைய முதல் ஆதிக்கத்திற்கு விழுந்த இடம் .அதன் விளைவாக இந்த சமூகம் ஒன்று எங்கே குடியேறி இருந்திருக்க வேண்டும்.

அதே நேரத்தில் இங்கிருந்த நெல்லுக்கும் யானை மற்றும் யானை தந்தத்தங்களை பெறுவதில்  போர்த்துக்கேயரின் ஒரு நோக்கமாக இருந்தது. இதனால் அவர்களுடைய ஆதிக்கம் இங்கு இருந்ததை அடையாளப் படுத்தக் கூடியதாக உள்ளது.

அதற்கு அப்பால் வண்ணாங்குளம், பறையர் குளம் அம்பட்டன் குளம், முதலியார் குளம் போன்ற பல்வேறு குளங்கள் சோழமண்டலக் குளத்தைச் சுற்றி வட்டாரத்தில் இருப்பதை எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த ஆய்வின்போது நாங்கள் ஒரு நாளிலே ஒரு இடத்திற்கு சென்று அந்த இடம் பற்றி முழுமையான வரலாற்று உண்மை என அறிந்து கொள்வது கடினமான விடயம்.

தொடர்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டது. ஆராயப்பட வேண்டிய ஒன்று ஆனால் எங்களுடைய கள ஆய்வில் சோழமண்டலம் கண்ணாட்டி செபஸ்தியார் கோயில் போன்ற இடங்களில் கூடுதலாக எங்கள் கள ஆய்வுகளை மேற் கொண்டிருந்தோம்.
 மிகவும் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் நான் கட்டுக்கரையில் சாஸ்திரி கூலாங்குளத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட போது எவ்வாறு ஒரு பழமையான குடியேற்ற ஆதாரங்கள் கிடைத்தன வோ.
 அதே போல்  யாழ்ப்பாணத்தில் கந்தரோடை ஆனைக்கோட்டை சாட்டி, பூநகரி போன்ற இடங்களில் எவ்வாறான பழமையான சான்றாதாரங்கள் கிடைத்ததோ இந்கும் அவை போன்று கிடைத்தது.

குறிப்பாக ஆதி இரும்பு பண்பாட்டோடு தொடர்புடையது என்று கருதக்கூடிய 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பிரதேசம் மக்கள் குடி யிருப்புகளாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தக் கூடிய பல வகையான வடிவங்களில் அமைந்த மண்பாண்ட ஓடுகள் எம்மால் கண்டுபிடிக்க கூடியதாக இருந்தது.

 தென் தமிழகத்தில் இலங்கையிலும் இரும்பினுடைய அறிமுகத்தோடு தான் நாகரிகமும் நிலையான குடியிருப்புகள்  தோன்றியது.அத்தகைய இரும்பின் பயன்பாடு இங்கே இருந்தது என்பதனை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் அயன் ஸ்லாட் என்னும்  இரும்பு தாது பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சில மண்பாண்ட விளிம்புகள் போன்றவற்றை வைத்துக் கொண்டு அவை கிறிஸ்தவ சகாப்தத்திற்கு சற்று முன்பாக இங்கே மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற உண்மைகள் எனக்கு தெரிய வந்துள்ளது.
பொதுவாக வன்னிப் பிரதேசம் யாழ்ப்பாணப் பிரதேசம் போன்றவற்றை காட்டிலும் எங்கே ஒரு தொன்மையான நாகரீகம் இருந்திருக்கின்றது என்னும் கருத்து பல தொல்லியல் அறிஞர்கள் முன் வைக்கப்படுகிறது.

இங்கே 3000 திற்கும் மேற்பட்ட குளங்கள் காணப்படுகின்றன.  அவற்றில் சிறு சிறு குளங்கள் பல மறைந்து விட்டன. இந்த குளங்களை சுற்றி மக்கள் குடியிருப்புகள் இருக்கிறது என்பதை விவசாய தேவைகளுக்கு அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நிலத்தை பண்படுத்தும் போது அதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

 அதேபோல் சோழமண்டல குளம் அதன்  சுற்று வட்டாரங்களிலும் இத்தகைய  குடியிருப்புகள் ஆதி இரும்பு காலப் பண்பாட்டோடும் பயன்பாட்டோடும் தோன்றி இருக்கலாம் என்பது இப்போது கிடைத்த தொல்பொருள் சான்றுகள் மூலம் எங்களால் அந்த முடிவுக்கு வரக் கூடியதாக உள்ளது.
 இதற்கு பறையன்குளம் குசவன் குளம் பறங்கியாறு வந்து முக்கிய காரணமாக இருக்கிறது.
எப்படி அனுராதபுரத்தில் ஒரு தொன்மையான நாகரீகம் உருவாகி வளர்வதற்கு மல்வத்து ஓயா ஒரு காரணமாக இருந்திருக் கின்றதோ இந்தப் பிரதேசத்திலே தொன்மையான நாகரீகம் உருவாகுவதற்கு பறங்கியாரும் ஒரு முக்கிய காரணமாக அமையலாம் என்பது என்னுடைய கருத்து.
 இந்தக் கருத்தை நாம் மேலும் உறுதிப்படுத்துவதற்கு இந்தப் பிரதேசத்தில் சில அகழ் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.
 அதற்கான சூழ்நிலைகள் அமையும் போது  பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்களாலும் எதிர்காலத்தில் முன் னெடுக்கப்படலாம் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது என தொல்லியல்துறை வாழ்நாள் பேராசிரியர் பரமு புஸ்ரெட்ணம்  தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More