மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் மாவட்டத்தில் காணாமல் போன 6 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தினை தொடா்ந்து அங்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதனால் மணிப்பூரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சி நடைபெறும் மணிப்பூர் மாநிலத்தில் முதல்வராக பீரன் சிங் உள்ளார். இந்த மாநிலத்தில் அதிகளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்ற நிலையில் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையே பிரச்சனை உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு மணிப்பூரில் இந்த இரு இனக்குழுக்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தமையினால் பலர் கொல்லப்பட்டனர்.
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு அதன்பின்னா் வன்முறை குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போதிலும் மணிப்பூர் முழுவதும் இன்னும் இயல்பு வாழ்க்கை என்பது திரும்பவில்லை. . இந்நிலையில் மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் மாவட்டத்தில் காணாமல் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்கள் 6 பேரும் மைத்தேயி இனத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இவர்களை குக்கி இனத்தவர்கள் கடத்தி பணயக்கைதிகளாக வைத்து கொலை செய்து இருக்கலாம் எனக் கருதப்படுவதனால் உயிாிழந்த 6 பேருக்கும் நீதி கேட்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ள மைத்தேயி மக்கள் எம்எல்ஏ, அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தியதுடன் சிலரது வீடுகளை சேதப்படுத்தியுள்ளனா். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது