47
வயலில் அறுவடை செய்யும்போதே கொள்வனவு செய்வதால் நெல்லில் இருக்கும் ஈரலிப்பைக் காரணம் காட்டி நெல்லுக்கு உரிய விலையைக் கொடுப்பதற்கும் கொள்வனவாளர்கள் முன்வருவதில்லை எனவே நெல் மற்றும் அரிசிக்கான விலையையானது அறுவடைக்கு முன்னராகவே நிர்ணயம் செய்யப்படவேண்டும் என இயற்கையின் நண்பர்கள் இயக்கம் கோரியுள்ளது.
இயற்கையின் நண்பர்கள் இயக்கம் ஊடகங்களை அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலேயே
அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த செய்தி குறிப்பில் ,
வடமாகாணத்தில் விளையும் நெல்லில் கணிசமான அளவைத் தனியார்துறை குறிப்பாக தென்பகுதி மற்றும் உள்ளூர் வர்த்தகர்களே கொள்வனவு செய்துவருகின்றனர். அதுவும், வயலில் அறுவடை செய்யும்போதே கொள்வனவு செய்வதால் நெல்லில் இருக்கும் ஈரலிப்பைக் காரணம் காட்டி நெல்லுக்கு உரிய விலையைக் கொடுப்பதற்கும் கொள்வனவாளர்கள் முன்வருவதில்லை.
வடக்கு மாகாணத்தின் மக்களின் நுகர்வு தேவையைவிட ஏறத்தாழ மூன்று மடங்கு நெல் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனாலும் தென்னிலங்கையைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் நெல்லைக் கொள்வனவு செய்துகொண்டு சென்று பியர் உற்பத்திக்கு பயன்படுத்த்தும் நிறுவனங்களுக்கு விற்பதுதான் மிகுதியை மீண்டும் வடபகுதிக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றார்கள்.
இதனால் வடமாகாணத்தில் நெல்லின் விலை அதிகமாக உள்ளது. இதன் காரணங்களால் அரிசியின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பால் ஏழைகள் கொள்வனவு செய்யமுடியாத நிலைமை காணப்படுகின்றது.
வடமாகாணத்தில் அரிசி தட்டுப்பாடு இல்லாத நிலையை பேணுவதற்கும், மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும், நெல் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையிலும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக நெல்லை முழுமையாகக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
நெல் மற்றும் அரிசிக்கான விலையையானது அறுவடைக்கு முன்னராகவே நிர்ணயம் செய்யப்படவேண்டும். சில பலநோக்குக் கூட்டுறவுச்சங்கங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நெல்கொள்வனவையே செய்துவருகின்றன. விரைவாக நெல் அறுவடை ஆரம்பமாக இருப்பதால் வடக்குமாகாண கூட்டுறவு வங்கி அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மூலமாக அதிகளவான நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குறிப்பாக வடக்குமாகாணத்தில் நெல்லின் மொத்த உற்பத்தியில் 50 வீதத்துக்கு மேல் கொள்வனவு செய்து களஞ்சியங்களில் சேமிப்பதற்கு தேவையான முழுமையான நிதியினை வடக்குமாகாண கூட்டுறவு வங்கி ஊடக வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை வடக்குமாகாண ஆளுநர் அவர்கள் செய்ய முன்வர வேண்டும்.
விவசாயிகளிடமிருந்து மாத்திரமே நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுவதை அறிவதற்கு நெல் உற்பத்தி செய்த விவசாயிகளின் பெயரில் வழங்கப்பட்ட கட்டணப் பற்றுச்சீட்டை கொள்வனவின்போது கோப்பில் இணைக்கப்படவேண்டும். அதன் ஊடாக விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவதை உறுதிசெய்யமுடியும்.
நெல் கொள்வனவின்போது கூட்டுறவு சங்கங்களின் கிராமிய வங்கிகள் ஊடக பணக்கொடுக்கல் வாங்கல்களினை மேற்கொள்வதனையும் ஆளுநர் அவர்கள் கவனத்தில் எடுப்பதன் மூலம் வடக்குமாகாணத்தில் நலிவடைந்துள்ள கிராமிய வங்கிகளும் வளர்ச்சி பெறும் நிலை உருவாகும் என்று நம்புகின்றோம்.
அதுபோலவே கொள்வனவு செய்யும் நெல்லை உலரவிடுவதற்கும், களஞ்சியப்படுத்துவதற்கும் உரிய வசதிகள் செய்யப்படுதல் வேண்டும். நாவற்குழியில் அமைந்துள்ள உணவுக்கு களஞ்சியம் திருத்தங்கள் இருந்தால் உடனடியாக சீர்செய்யப்பட்டு இது மீண்டும் இயங்குநிலைக்கு கொண்டுவரப்படவேண்டும்.
நெல் அறுவடை காலங்களில் உலரவிடும் தளங்கள் வடமாகாணத்தில் இல்லாமையால் விவசாயிகள் வீதிகளில் நெல்லினை உலரவிடுவதால் வீதிகளின் நெருக்கடி மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றது. இதனை கருத்தில் எடுத்து அதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக நாவற்குழி உணவுக்கு களஞ்சியம் போன்ற இடங்களில் நெல் அறுவடை காலங்களில் நெல் உலரவிடுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என்று விவசாயிகளின் சார்பில் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கின்றோம்.
வடக்குமாகாணத்தில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் நெல்கொள்முதல் நடவடிக்கையின் போது அது தொடர்பான நெல்லை கையேற்பது களஞ்சியப்படுத்துவது அதனுடன் தொடர்புள்ள ஆவணங்களைப் பேணுவது, கணக்குகளை வைத்திருத்தல் ஆகிய பொறுப்புகள் வடக்குமாகன் ஆளுநரின் நேரடி கண்காணிப்பில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அந்தந்த பிரதேச செயலாளர்கள் உள்ளடக்கியதாக ஒரு குழு நியமிக்கப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்படவேண்டும்.
கொள்வனவு செய்யப்படும் நெல் களஞ்சியப்படுத்தும் அதேநேரத்தில் கையிருப்பில் உள்ள நெல்லினை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலைகளின் நெல் குத்தும் திறனை பரிசீலித்து நெல்குத்தும் பணியை நிறைவுசெய்யும் வகையில் அரிசியாக மாற்றப்படவேண்டும்
தற்போதைய பொருளாதார நிலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம்பெறும் குடும்பங்களுக்கு நியாயவிலையில் கூட்டுறவுச்சங்கங்கள் மூலம் அரிசி மற்றும் அரிசிமா ஆகியவற்றை வழங்கமுடியும்.
அதுபோல வடமாகாணத்தில் உள்ள தனியார் அரிசி ஆலைகளுக்கு போதியளவு களஞ்சிய வசதிகள் இருக்கும் நிலையிலும் வங்கிகள் அவர்களின் தேவைக்குரிய கடன் வசதிகள் வழங்குவதில்லை. மட்டுப்படுத்தப்பட்ட நிலையில்தான் கடன் வழங்கப்படுகின்றது.
வங்கிகள் கடன் எல்லையை அதிகரித்து வழங்கி வடமாகாணத்தில் தனியார் ஆலைகள் உற்பத்திசெய்யும் நெல்லின் கணிசமான (50வீதம்) பகுதியை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யக்கூடியதாக வசதிகள் செய்யப்படுதல் வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Spread the love