Home இலங்கை 2025: தமிழ் மக்களின் ஆண்டுப் பலன்?

2025: தமிழ் மக்களின் ஆண்டுப் பலன்?

by admin

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ்ப் புத்திஜீவிகளில் சிலர் தமிழ்க் கிராம மட்டத்தில் விவசாய அமைப்புகளைச் சந்தித்து,விவசாயிகளின் குறைகளைக் கேட்டு வருகிறார்கள்.இன்னொரு பக்கம் கடற் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சந்திரசேகரன் தமிழ்ப் பகுதிகளில் கடல் தொழிலாளர் சங்கங்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தியின் பிடியைப் பலப்படுத்தி வருகிறார்.கடந்த மாத இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்தில், தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான மற்றொரு குடிமக்கள் அமைப்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. “மறுமலர்ச்சிக்கான மக்கள் இயக்கம்” என்று அழைக்கப்பட்ட அந்த அமைப்பை “மாற்றத்துக்கான மக்கள் அமைப்பு” என்று சம்பந்தப்பட்டவர்கள் அழைக்கிறார்கள்.அது யாழ் ஊடக அமையத்தில் ஒர் ஊடகச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.

நாட்டை இப்பொழுது ஆளும் தேசிய மக்கள் சக்தி என்பது ஜேவிபியும் உட்பட 21 அமைப்புகள் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பு ஆகும். இக்கட்டமைப்புக்குள் தொழிற்சங்கங்கள்,இடது சாய்வுடைய அமைப்புக்கள்,துறைசார் தொழிற்சங்கங்கள்,பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்புகள்,மாணவ அமைப்புகள்,மகளிர் அமைப்புகள்,என்றிவ்வாறாக சமூகத்தின் பல்வேறு துறைகளை அல்லது பல்வேறு பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கல் உண்டு.இதில் இடதுமரபில் வராதவர்களையும் உள்ளீர்க்கத் தேவையான விரிவு,நெகிழ்ச்சி ஜேவிபியிடம் ஏற்பட்டிருக்கிறது.இப்போதுள்ள பிரதமர் ஹரிணி ஜேவிபி உறுப்பினர் அல்ல. வளமான குடும்ப பின்னணியை கொண்டவர்.அவரைப் போன்றவர்களையும் உள்ளீர்க்கத்தக்க விரிவு ஜேவிபியிடம் ஏற்பட்டிருக்கிறது.

ஜேவிபியானது சீனச்சார்பு கொமியுனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி வந்தவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம்.அதனால் அந்த அமைப்பிடம் இடதுசாரி இயக்கங்களிடம் காணப்படும் பெரும்பாலான ஒழுக்கங்கள் உண்டு. அது இப்பொழுது நடைமுறையில் ஒரு கொமியுனிஸ்ட் அமைப்பாக இல்லை.சீனக் கொமியூனிஸ்ற் காட்சியைப்போலவே அதுவும் பெருமளவுக்கு தேசியவாதப் பண்புமிக்க ஒரு கட்சிதான்.ஆனால் கொம்யூனிஸ்டுகளிடம் காணப்படும் அமைப்பாக்க ஒழுக்கம் அவர்களிடம் உண்டு.அதைவிட முக்கியமாக தன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழுந்த அனுபவம் ஜேவிபிக்கு உண்டு.இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட அமைப்பு;இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஒர் அமைப்பு.அத்தனை அழிவுகளில் இருந்தும் மீண்டெழுந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான அனுபவம் அந்த அமைப்புக்குண்டு. அதைவிட மேலதிகமாக இப்பொழுது கடந்த ஆண்டு பெற்ற இரண்டு தேர்தல் வெற்றிகளும் அவர்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கின்றன.அதிலும் குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் கிடைத்த வெற்றிகளால் அவர்கள் அதிகம் உற்சாகமடைந்திருக்கிறார்கள். எனவே தென்னிலங்கையில் இருப்பது போன்ற கட்டமைப்புகளை,வலைப்பின்னலை தமிழ்ப் பகுதிகளிலும் பரவலாக்க முயற்சிப்பார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்பிபியால் நிறுத்தப்பட்டு ஆசனங்களை வென்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஜேவிபியின் கொள்கை வழி வந்தவர்களோ அல்லது புரட்சிகரமான உள்ளடக்கங்களைக் கொண்டவர்களோ அல்ல. அவர்கள் தமிழ் மக்களுடைய போராட்டங்களிலும் காணப்பட்டதில்லை. கொழும்பில் ஜேவிபி நடத்திய ஆபத்துக்கள் மிகுந்த போராட்டங்களிலும் காணப்பட்டதில்லை. இந்த விடயத்தில் வடக்கு கிழக்கில் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும்போது எண்பிபி,ஏனைய தென் இலங்கை மையக் கட்சிகளைப் போலத்தான் செயற்பட்டிருக்கிறது. இதில் திருக்கோணமலையிலிருந்து தெரிவு செய்யப்பட்டவரும்,பதில் வெளிவிவகார அமைச்சராக இருப்பவருமாகிய அருண் ஹேமச்சந்திர ஓரளவுக்கு விதிவிலக்கு எனலாம்.

எனவே நாடாளுமன்றத் தேர்தலில் தன் வேட்பாளர்களைத் தெரிவதில் இருந்த பலவீனங்களை அடுத்தடுத்த தேர்தல்களில் இல்லாமல் செய்வதற்கு என்பிபி முயற்சிக்கும்.குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் என்பிபிக்குச் சார்பான அறிவு ஜீவிகளின் அணி துடிப்பாகச் செயல்படுகின்றது.ஆனால் தமிழ் மாணவர்கள் மத்தியில் என்பிபிக்கு குறிப்பிட்டுச் செல்லக்கூடிய பலமான கட்டமைப்பு கிடையாது.

2009க்குப் பின் ஒரு மூத்த ஜேவிபி உறுப்பினர் எனக்குச் சொன்னார், இலங்கைத் தீவிலேயே அதிகம் போராட வேண்டிய ஒரு பல்கலைக்கழகம் யாழ் பல்கலைக்கழகம்தான்.ஆனால் போராட முடியாமல் இருப்பதும் அதே பல்கலைக்கழகந்தான் என்று. அவர் சொன்னது முழுவதும் சரியல்ல. 2009க்குப் பின் வந்த ஆண்டுகளில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் துணிச்சலாகப் போராடியிருக்கிறார்கள். ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக ஒரு சோர்வு காணப்படுகிறது.

குறிப்பாக,கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்திய தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்புக்குள் பல்கலைக்கழக மாணவ அமைப்புகள் காணப்பட்டன. ஆனால் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பகிரங்கமாக களமிறங்கி செயல்படுவதற்கு மாணவர் அமைப்பு தயங்கியது.ஆங்காங்கே உதிரிகளாக அல்லது சிறு குழுக்களாக அவர்கள் பங்களித்திருக்கலாம்.  ஆனால் “பொங்கு தமிழ்”, அல்லது “எழுக தமிழ்”களுக்காக உழைத்ததுபோல பொது வேட்பாளருக்காக பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு சமூகமாகச் உழைக்கவில்லை. நாங்கள் பொதுச் சபையை ஏற்றுக்கொள்கிறோம்;ஆனால் பொது வேட்பாளரை ஏற்கவில்லை என்ற ஒருவித நழுவலான நிலைப்பாடு அங்கே காணப்பட்டது. பொது வேட்பாளரை முன்னிறுத்திய கட்சிகளோடு இணைந்து செயல்படுவதற்கு அவர்களுக்குத் தயக்கம் இருந்திருக்கலாம்.அல்லது ஒரு தேர்தல் நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடுவதற்கும் அவர்கள் தயங்கியிருக்கலாம்.ஆனால் யாழ்.பல்கலைக்கழகமோ கிழக்கு பல்கலைக்கழகமோ பொது வேட்பாளருக்கு ஆதரவாக மக்களைத் திரட்டும் பணியில் ஒரு மாணவ சமூகமாகத் தீவிரமாக,எழுச்சிகரமாகச் செயல்படவில்லை. அப்படித்தான் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கமும் புலமைசாரா ஊழியர் சங்கமும் பொது வேட்பாளருக்காக ஒரு சமூகமாக இறங்கிச் செயற்படவில்லை.

முன்பு ஐந்தாண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் ஊழியர் சங்கமும் ஒப்பீட்டளவில் உற்சாகமாக இறங்கி வேலைசெய்தன. ஆனால் பொது வேட்பாளருக்காக அவ்வாறு உழைக்கவில்லை. புலமைசாரா ஊழியர் சங்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக நின்றது.விரிவுரையாளர்களைப் பொறுத்தவரை அரசறிவியல் துறையின் தலைவராகிய பேராசிரியர்.கணேசலிங்கம் தமிழ் மக்கள் பொதுச்சபையில் ஒரு அங்கம் வகித்தார். பொதுக்கட்டமைப்புக்குள்ளும் இருந்தார். அவரைத்தவிர வேறு சில விரிவுரையாளர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவாக உதிரிகளாகக் காணப்பட்டார்கள். ஆனால் ஒரு அறிவாளிகள் சமூகமாக அவர்கள் திரண்டு பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை. ஒப்பீட்டளவில் பொது வேட்பாளருக்கு ஆதரவான விரிவுரையாளர்கள்தான் அதிகம்.ஆனால் அவர்கள் அமைப்பாக்கப்படவில்லை.

குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில புத்திஜீவிகள் என்பிபிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து ஊடக சந்திப்பை நடத்தினார்கள்.எனினும் அதில் அவர்கள் திட்டவட்டமாக தெளிவாக என்பிபியை ஆதரிக்குமாறு கூறுவதற்குத் தயங்கினார்கள்.ஆனால் அந்த தயக்கம் தேர்தல் வெற்றிகள் பின் இப்பொழுது மறைந்துவிட்டது. அவர்கள் தயங்கித்தயங்கி யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்கு வழிகாட்டிய போது அவர்களுக்கு எதிராக கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டு பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டன. அவர்களைக் கருத்து ரீதியாக வென்றெடுப்பதற்கோ அல்லது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட பல்கலைக்கழக ஆசிரியர்களை ஒரு அமைப்பாகத் திரட்டுவதற்கோ முயற்சி எடுக்கப்படவில்லை. மாணவ அமைப்புகளும் அந்த விடயத்தில் திடகாத்திரமாகச் செயற்படவில்லை.

இப்படிப்பட்டதோர் பின்னணியில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு தயங்கி தயங்கி தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய என்பிபிக்கு ஆதரவான புத்திஜீவிகள் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் துணிச்சலாக முன்வந்து தமது அரசியல் சாய்வை வெளிப்படுத்தினார்கள். தமிழ்த் தேசியவாத அரசியலை “மலட்டு அரசியல்” என்றும் அழைத்தார்கள்.

இது யாழ்.பல்கலைக்கழகத்தின் இப்போதுள்ள அரசியல் சூழலைக் காட்டுகின்றது. தமிழ் பகுதிகளில் உள்ள ஒர் உயர்கல்வி நிறுவனத்தின் நிலைமை இதுவென்றால், ஏனைய துறைசார்ந்த கட்டமைப்புகளைக் குறித்துச் சிந்திக்கத் தேவையில்லை.

அதைவிட மோசமான ஒரு விடயம்,தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் பொருத்தமான மக்கள் கட்டமைப்புகள் அநேகமாக இல்லை. ஏனென்றால் அவர்களுக்குத் தேசியவாத அரசியல் என்றால் என்னவென்று தெரியவில்லை. தேசியவாத அரசியல் என்பது மக்களை ஆகப்பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. எப்படிக் கூட்டிக் கட்டுவது? அவர்களை அரசியல் மயப்படுத்த வேண்டும்;அல்லது குறைந்தது இனமான உணர்வின் அடிப்படையிலாவது திரட்டவேண்டும்; அமைப்பாக்க வேண்டும். ஆனால் எத்தனை தமிழ்க் கட்சிகளிடம் அவ்வாறான கட்டமைப்புகள் உண்டு?

ஆனால் இந்த வெற்றிடத்தை என்பிபி விளங்கி வைத்திருக்கின்றது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்னிலங்கை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவ அமைப்புகளோடு தொடர்புடைய தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் என்பிபிக்கு ஆதரவாகத் தமிழ்க் கிராமங்கள் சிலவற்றில் வேலை செய்திருக்கிறார்கள்.எனவே இப்பொழுது தேர்தல் வெற்றிகள் தந்த உற்சாகத்தோடு,அரச பலத்தோடு என்பிபி தமிழ்ப் பகுதிகளில் தனது கட்டமைப்புகளை ஆழமாகப் பலப்படுத்தி விரிவுபடுத்தி வருகிறது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒரு தேர்தல் ஆண்டாக அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகம் தெரிகின்றன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பெரும்பாலும் முதலில் நடத்தக்கூடும். காசு வேண்டும். ஆனாலும் கடந்த ஆண்டு கிடைத்த தேர்தல் வெற்றிகளை அடுத்தடுத்த கட்டத்துக்குப் பலப்படுத்துவது என்றால் தேர்தல்களை வைக்கவேண்டும்.குறிப்பாக இந்தியாவைச் சமாதானப்படுத்த மாகாணசபைத் தேர்தலை வைக்க வேண்டியிருக்கும்.எனவே இந்த ஆண்டும் ஒரு தேர்தல் ஆண்டாக அமையக்கூடிய வாய்ப்புகளே அதிகம். இப்படிப்பட்டதொரு பின்னணியில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்மக்கள் தங்களுக்கு வழங்கிய தீர்ப்பிலிருந்து கற்றுக்கொண்டு,என்பிபியையும் அர்ஜுனாக்களையும் எதிர்கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தயாரா?அல்லது,சிவப்பு மஞ்சள் கொடியைக் காட்டினால் தமிழ்த் தேசிய வாக்குகள் கொத்தாக வந்து விழும் என்று கற்பனையில் மூழ்கியிருக்கிறார்களா?

தமிழ் மக்களை அமைப்பாக்கவில்லை யென்றால் அர்ஜுனாக்கள் மேலும் பெருகுவார்கள்.தமிழ் மக்களின் சின்னச்சின்ன பிரச்சனைகளை, சின்னச் சின்னக் கவலைகளை;குறைகளைக் கேட்பதற்கும் அறிவதற்கும் அந்தந்தத் துறைக்குரிய மக்கள் கட்டமைப்புகள் வேண்டும். அவை இல்லாத வெற்றிடத்தில் தான் அர்ஜுனாக்கள் வெற்றி பெறுகிறார்கள்.எனவே இந்த ஆண்டு நடக்கக்கூடிய தேர்தலில் தேசத்தைத் திரட்டி வெற்றி பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் ஏதாவது புதிய உபாயங்கள் உண்டா?

இருப்பதில் பெரிய கட்சி தமிழரசு கட்சி இப்பொழுதும் நீதிமன்றத்தில் நிற்கின்றது. இனிமேலும் நிற்கப் போகிறது என்றுதான் தெரிகிறது. அதன் உட்க்கட்சிப் பிரச்சினைகளைத் தீர்க்க அதனால் முடியவில்லை. எப்படி ஏனைய கட்சிகளை இணைப்பது?

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அந்த அடிப்படையில்தான் அவர்கள் அரசியல் தீர்வை நோக்கிய ஒன்றிணைப்பு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தமிழரசுக் கட்சிக்குள் பலமாகக் காணப்படும் சுமந்திரன் அணி அதற்கு ஒத்துழைக்குமா?

மேலும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் முன்னணியை நம்புமா?அந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் மீது முன்னணி கடந்த காலங்களில் உமிழ்ந்துவிட்ட கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை முன்னணி கைவிட்டு விட்டதா?

இவை தவிர தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், உள்ளிட்ட ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் ஏதாவது உண்டா ?

முன்னணியின் ஐக்கிய முயற்சிகள் யாப்புருவாக்க நோக்கிலானவை. அவை தேர்தல் தேவைகளுக்கானவை அல்ல என்று தெரிகிறது. ஆனால் தேர்தல்கள் முதலில் வரும். யாப்பு வருமா வராதா என்பது நிச்சயமில்லை. ஏனென்றால் நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்காவது நிமிர்த்தாமல் யாப்பில் கை வைப்பது ஆபத்தானது என்று என்பிபிக்கு விளங்கும்.குறிப்பாக மகா சங்கத்தினர் இப்போதைக்கு ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே யாப்புருவாக்கத்தை விடவும் அவசரமானது தேர்தல்கள்தான். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் என்பிபி புதிய வெற்றிகளைப் பெறுமாக இருந்தால்,அது யாப்புருவாக்க முயற்சிகளில் செல்வாக்குச் செலுத்தும். அவர்கள் தமிழ்த் தரப்பில் பொருட்படுத்த வேண்டிய தேவை இப்பொழுது இருப்பதைவிட மேலும் குறையும்.அதை தமிழ்த் தரப்பு எப்படித் தீர்க்கதரிசனமாக ஐக்கியமாக எதிர்கொள்ளப் போகின்றது?

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More