Home இலங்கைகண்டி – தவுலகலவில் கடத்திச் செல்லப்பட்ட மாணவி குறித்த தகவல் வெளியாகியது!

கண்டி – தவுலகலவில் கடத்திச் செல்லப்பட்ட மாணவி குறித்த தகவல் வெளியாகியது!

by admin

கண்டி – தவுலகல பகுதியில் வானில் வந்து பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று (11.01.25) நடந்த இந்தக் கடத்தலின் முக்கிய சந்தேகநபர், மாணவியின் தந்தையின் சகோதரிகளில் ஒருவரின் மகன் எனத் தகவல் வெளியாகியுள்ளதாகக் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த மாணவிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் திருமணம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் பின்னர் மாணவியின் தந்தை தனது மறுப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட பிரச்சனைக்குரிய சூழ்நிலை காரணமாக சந்தேகநபர் மாணவியை கடத்திச் சென்றுள்ளமை காவற்துறையினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், மாணவியை கண்டுபிடித்து சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரைக் கைது செய்ய மூன்று காவற்துறை  குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

தவுலகல, ஹன்தெஸ்ஸ பகுதியில் குறித்த மாணவி தற்காலிகமாக வசித்து வந்த நிலையில், நேற்று (11.01.25) காலை தனது தோழியுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தவுலகல காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின்படி, கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வான் நேற்று பொலன்னறுவை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலன்னறுவை காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, இன்று (12.01.25) கம்பளை பகுதியில் வைத்து, குறித்த வானின் சாரதி தவுலகல காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகத்திற்குரிய வானின் சாரதி, கம்பளை, கஹடபிட்டிய பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, 19 வயதான மாணவியைக் கடத்திச் சென்ற சந்தேகநபரான இளைஞன், முதலில் 5 மில்லியன் ரூபாயை கப்பமாக கோரியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், பின்னர் அவர் அதை 3 மில்லியனாகக் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் மாணவியின் தந்தைக்குச் சொந்தமான வாகனத்தை கோரி, 200,000 ரூபாயை வங்கி கணக்கில் வரவு வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, மாணவியின் தந்தை ரூ.50,000-ஐ சம்பந்தப்பட்ட கணக்கில் வரவு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More