Home இலங்கை சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் – ஜனாதிபதி!

சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் – ஜனாதிபதி!

நல்லிணக்கத்தில் பூரணமடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவோம்! பிரதமர்.

by admin

“அறுவடைத் திருநாள்” என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. நிறைவான அறுவடைக்கு பங்களித்த சூரியன், பூமி, மழை மற்றும் பசுக்கள், உபகரணங்களுக்கு நன்றி செலுத்துவது இந்த நாளின் சிறப்பம்சமாகும். இந்த விழா ‘தை’மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடக்கு நோக்கிச் செல்லும் ‘உத்தராயணம்’, தைப் பொங்கல் நாளில் தொடங்குகிறது. புதிய திசையை நோக்கிச் செல்லல், மனித சமூகத்தின் உள்ளக-வெளிப்புற சகவாழ்வு என்பனவே தைப்பொங்கல் பண்டிகையின் அர்த்தமாகும்.

இந்த நாட்டு மக்களின் நற்பண்புகள்,நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை மேம்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஆரம்ப முயற்சியாகவும், சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைக்கான புதிய ஒரு திசையின் தொடக்கமாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமயத்தில், தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. வரலாற்று ரீதியாக வேரூன்றிய ஆசிய மரபுகளில் மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான பிணைப்பு பிரிக்க முடியாதது. தைப்பொங்கல் தினத்தால் வெளிப்படுத்தப்படும் அந்த மரபுகள் இந்த திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், தைப்பொங்கல் கொண்டாட்டம் மக்களின் கலாச்சார வாழ்வில் புதிய நம்பிக்கைகளை கட்டியெழுப்புகிறது. நாட்டில் உருவாகியுள்ள புதிய உத்வேகத்துடன், இலங்கையர்களாகிய நம் அனைவருக்கும், “அழகான வாழ்க்கை” என்ற நம்பிக்கையை நம் இதயங்களில் சுமந்து, புத்தாண்டில் புதிய உற்சாகத்துடன் முன்னோக்கிக் கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக சுற்றுச்சூழல் முன்னேற்றத்திற்கு உகந்த முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய கலாசார நெறிமுறை இருப்பை உருவாக்குவதன் மூலம் நிலையான அமைதி, நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்குத் தேவையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தலைமை பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறலை நாங்கள் ஏற்கிறோம்.

நாட்டிற்கும் மக்களுக்கும் பல நல்ல விடயங்களை நிறைவேற்ற உறுதிபூண்டு, நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாங்கள், அந்த வாக்குறுதிகளை தடைகளுக்கு மத்தியிலும் பின்வாங்காத துணிச்சலுடனும் அசைக்க முடியாத உறுதியுடனும் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம். இந்த நாட்டு மக்களின் முகங்களில் நீடித்த புன்னகையைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட இந்த செயற்பாட்டில், புதிய அணுகுமுறைகளுடன், ஒற்றுமையுடனும் பங்கேற்புடனும் ஒன்றிணைய உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
இலங்கை மற்றும் உலகளாவிய இந்து பக்தர்கள் அனைவருக்கும் நல்லிணக்கம் மற்றும் நன்றியுணர்வு நிறைந்த, வளமான மற்றும் மகிழ்ச்சியான தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

நல்லிணக்கத்தில் பூரணமடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவோம்!

ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் கைமாறு மறவாத உன்னத பண்புகள் என்பனவற்றைக் கொண்ட தமிழ் மக்களால் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையானது உண்மையான கலாச்சார மதிப்பீடுகளை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கின்றது.

நாற்று நடுவது முதல் விளைச்சலை அறுவடை செய்வதுவரை விவசாய நடவடிக்கைகளுக்கு சூரிய பகவான் உட்பட இயற்கை ஜீவராசிகள் அனைத்தும் செய்யும் உதவிகளுக்கு நன்றி செலுத்தவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது .

நாம் அனைவரும் இயற்கையின் படைப்புக்கள். இயற்கையை மீறி எம்மால் எந்த பயணத்தையும் மேற்கொள்ள முடியாது. இதனால் இயற்கையினூடாக எமக்கு கிடைக்கப்பெற்ற ஆசீர்வாதங்களுக்கு கைமாறு செய்வது மிகவும் உன்னதமான மனிதப் பண்பாகும். நாடு என்ற அடிப்படையில் நாம் விசேட மைல்கற்களை எட்டியுள்ளோம். கட்டமைப்பு மற்றும் கொள்கை ரீதியிலான மாற்றம் உட்பட, மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லும் பாரிய மற்றும் பாரதூரமான பொறுப்பு எமக்கு உள்ளது. அரசாங்கம் மற்றும் அரசு என்ற அடிப்படையில் நாம் அந்த சவால்கள் நிறைந்த மற்றும் பொறுப்புவாய்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து பரிணாம மாற்றத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.

அவ்வாறான தருணங்களில் இயற்கையைப் போற்றி அதற்கு நன்றி செலுத்தும் இத்தகையதொரு அற்புதமான பண்டிகையைக் கொண்டாடுவது, மீண்டுமொரு முறை கலாச்சார ரீதியிலான செழிப்பான பிரஜைகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமையும். ஒருவரையொருவர் மதித்தல் மற்றும் மற்றவர்களின் மதம், கலாச்சார உரிமைகளை மதிக்கும் விசேட மனித பண்புகள் மற்றும் நல்லிணக்கத்தில் பூரணமடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இந்த தைப்பொங்கல் தினத்தில் நாம் மீண்டுமொரு முறை உறுதிகொள்வோம்.

தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் தமிழ் சமூகத்தின் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும் மகிழ்ச்சிகரமான தைப்பொங்கல் தினமாக இன்றைய தினம் அமைய வேண்டுமென மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்.

ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

Spread the love

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More