‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு 1995 முதல் ஆண்டுதோறும் ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அரசு துறையில் நிலவும் ஊழல் குறித்து நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து இப்பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 2024-ம் ஆண்டிற்கான ஊழல் புலனாய்வு குறியீடு (சி.பி.ஐ.) தற்போது வெளியாகி உள்ளது. இதில் இந்தியா 96-வது இடத்தைப் பிடித்து உள்ளது. நிபுணர்கள் மற்றும் வணிகர்களின் கூற்றுப்படி, பொதுத்துறை ஊழலின் அளவை இந்த அமைப்பு மதிப்பிடுகிறது. அதன்படி 180 நாடுகளின் நிலவரம் தரவரிசைப்படுத்தப்பட்டது.
நாடுகளுக்கு பூஜ்ஜியம் முதல் 100 வரையிலான மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இதில் ‘பூஜ்ஜியம்’ என்பது மிகவும் ஊழல் நிறைந்ததாகவும், ‘100’ என்பது ஊழலற்ற நிர்வாகத்தையும் குறிப்பதாகும். அந்த வகையில் இந்த பட்டியலில், 180 நாடுகளில் இந்தியா 96-வது இடத்தில் உள்ளது.
2024-ம் ஆண்டுக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண் 38 ஆக உள்ளது. 2023-ல் 39 மதிப்பெண் பெற்றிருந்த இந்தியா, தற்போது ஒரு மதிப்பெண் குறைந்துள்ளது. அதாவது ஊழல் மலிந்து உயர்ந்துள்ளது. 2022-ல் இந்த மதிப்பெண் 40 ஆக இருந்தது. 2023-ல் இந்தியாவின் தரவரிசை 93 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான்-135 வது இடம் மற்றும் இலங்கை 121-வது இடம் பெற்று உள்ளன. வங்காளதேசத்தின் தரவரிசை 149 ஆக பின்தங்கி உள்ளது. ஊழல் குறைந்த நாடாக பட்டியலில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளன.