மதுபோதையில் அரச பாடசாலைக்குள் நுழைந்து மாணவிகள் முன்னிலையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் காவல்துறை உத்தியோகத்தா் ஒருவர் நேற்றுத் திங்கட்கிழமை (17/2/2025) கைது செய்யப்பட்டதாக மல்லாவி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மல்லாவி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவல்துறை உத்தியோகத்தா் ஆவார்.
மல்லாவி பகுதியில் உள்ள ஒரு அரசாங்க பாடசாலையில் காவல்துறை உத்தியோகத்தா் ஒருவர் குடிபோதையில் வந்து பல மாணவிகளைத் துன்புறுத்துவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மல்லாவி காவல்நிலைய அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று, அநாகரீகமாக நடந்து கொண்ட காவல்துறை உத்தியோகத்தரைக் கைதுசெய்து, தடயவியல் மருத்துவரிடம் பரிந்துரைத்தபோது, அவர் குடிபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
அதன்படி, சந்தேகத்திற்குரிய காவல்துறை உத்தியோகத்தா் , குடிபோதையில் கடமையில் இருந்தமை, குடிபோதையில் அரசுப் பள்ளிக்குள் நுழைந்தமை மற்றும் மாணவிகள் முன் அநாகரீகமாக நடந்து கொண்டமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.