இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ள. இதன் மூலம் இலங்கைக்கு அதன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை முன்கொண்டு செல்ல சுமார் 334 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உடனடியாகக் கிடைக்கவிருக்கிறது.
திட்டத்தின் கீழ் தற்போதைய செயல்திறன் வலுவாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக செலவினங்களுக்கெனக் குறித்த இலக்கைத் தவிர, 2024 டிசம்பர் மாத இறுதிக்கான அனைத்து இலக்குகளும் எட்டப்பட்டன. 2025 ஜனவரி மாத இறுதிக்குள் செலுத்த வேண்டிய பெரும்பாலான கட்டமைப்பு அடைவுகள் தாமதமாகவேனும் நிறைவேற்றப்பட்டுள்ளன அல்லது செயல்படுத்தப்பட்டன. பிணைப் பரிமாற்றத்தை பூர்த்திசெய்யும் அண்மைய வெற்றியானது கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய அடைவாகக் கருதப்படுகிறது.
பொருளாதார மீட்பு வேகம் பெறுவதால் சீர்திருத்த முயற்சிகள் பலனளிக்கின்றன. பொருளாதாரம் இன்னும் வலுக்குன்றியே இருப்பதால், பொருளாதாரத்தை நீடித்த மீட்சி மற்றும் நிலைத்தன்மையை நோக்கி நகர்த்துவதற்கு சீர்திருத்த நிகழ்ச்சி நிரலைத் தக்கவைத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிடப்படுகிறது.