மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதாள குழுக்களால் குழப்பங்கள் ஏற்படலாம் என்று ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அண்மையில் கூறியிருந்த நிலையில் அவர் கூறியது போன்று அங்கு சம்பவங்கள் நடப்பதாகவும் இது தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04/03/2025) ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இவ்வாறு கூறினார்.
கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி ஆரையம்பதியில் வாள்வெட்டு சம்பவமொன்று நடந்தது. சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் கைதாகவில்லை என்று மக்கள் போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து மட்டக்களப்பு கல்லடியில் வாள்வெட்டு குழுவால் திங்கட்கிழமை (03/03/2025) கத்திவெட்டுச் சம்பவமொன்று நடந்துள்ளது.
ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதாள குழுக்களால் சில குழப்பங்கள் ஏற்படலாம் என்று கூறியிருந்த நிலையில் கல்லடியில் குற்றச் செயலொன்று நடந்துள்ளது. அதேபோன்றுதான் ஒரு வாரத்திற்கு முன்னர் ஆரையம்பதியில் நடந்துள்ளது. இது தொடர்பில் அவசரமாக கரிசனை எடுத்து அதற்கு முடிவு காண வேண்டும் என்றார்.