Home இலங்கைமிகப் பெரும் பொய் என்பதே உண்மை – பேராசிரியர் சி ஜெயசங்கர்.

மிகப் பெரும் பொய் என்பதே உண்மை – பேராசிரியர் சி ஜெயசங்கர்.

by admin

 

இலங்கை மக்களாகிய நாங்கள் இலவச கல்வியை பெரும் கொடையாக பெற்றிருப்பவர்கள். இத்தகைய கொடையாக பெற்றிருக்கும் இலவச கல்வியை மிகப்பெரும் வரமாக மாற்றுவதற்கு பதிலாக சாபமாகவே மாற்றப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. ஆக்கத்திறன்களையும், ஆளுமை விருத்திகளையும் உருவாக்குவதற்கான கல்வி முறையானது, போட்டி பரீட்சைக்குரியதாக மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இலவச கல்வி என்பதன் அர்த்தம் இழக்கச் செய்யப்பட்டு பெருமளவு முதலீட்டுக்குரிய விடயமாக போட்டி பரீட்சைக்கு தயார்படுத்தல் நிகழ்ந்து வருகிறது.

இத்தகைய பின்னணியில் பெண்களது கல்வி என்பது அவர்களது திருமணம் வரையிலான பராமரிப்பு என்பதாகவே காணப்படுகிறது. பெண்கள் எத்தகைய துறையில் கற்று வந்தாலும், அவர்களை காலாகாலத்திற்கு கட்டி வைத்து விடுவதிலேயே குடும்பமும் சமூகமும் கண்ணாயிருக்கிறது. உரிய காலத்தில் அல்லது காலாகாலத்தில் கட்டி கொடுத்து மடியில் கட்டி வைத்திருக்கும் நெருப்பை இறக்கி வைத்து ஆசுவாசம் அல்லது ஆறுதல் கொள்ளுதலே இங்கு அடிப்படை நோக்கமாக காணப்படுகிறது. சுருக்கமாக இதனை பொறுப்பு துறத்தல் என்று கூறலாம்.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது பெண்களை பொறுப்பாக கருதும் அதாவது சுமையாக அல்லது ஆபத்தாக கருதும் சமூக பண்பாட்டு விழுமியம் ஆகும். அடுத்தது நவீன கல்வி என்று காலனியம் ஏற்படுத்திய கல்வி முறையில் கருத்தில் கொள்ளப்படாத பாதகமான பக்கங்கள். மூன்றாவது சாதக பாதகங்களுடன் காணப்படுகின்ற நவீன கல்வி முறையின் சாதகங்கள் நீக்கப்பட்ட போட்டி பரீட்சை முறை. மேற்கூறிய விடயங்கள் குறிப்பாக மாணவிகளது இயல்பான ஆற்றல்கள், ஆளுமைகளை சிதைப்பதன் மூலமாக பெரிதும் உள அவலத்துக்குள்ளாக்கப்பட்ட நிலைமையின் பாரதூரத் தன்மை கண்டுகொள்ளப்படாததாகவே இருக்கிறது.

கல்யாணம் வரைக்குமான பெண்களது கல்வி ஊர்வலம், அதன்பின் தடுத்தாட் கொள்ளப்படுவது; பெண்களை ஏற்றுக்கொள்ள வைத்து, குடும்ப வாழ்க்கையுள் அமிழ்த்து விடுவது இறுகிப்போன பண்பாட்டு விழுமியமாக இருக்கிறது. சமூக பொருளாதார அபிவிருத்தியில் மேற்படி நிலை எத்தகைய பாதகங்களை ஏற்படுத்தியிருக்கிறது, ஏற்படுத்திவருகிறது என்பது உலக அளவில் பெண்நிலைவாத சிந்தனையாளர்களால், பொருளாதார சிந்தனையாளர்களால் ஆய்வுகளாகத்தொடர்ந்துவெளிப்படுத்தப்பட்டுவருகிறது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, இவ்விடயம் சார்ந்த ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டு இருப்பதும் கவனத்திற்குரியது. இலங்கையின் பொருளாதார மீட்சியும்; பொருளாதார வீழ்ச்சியின் காரணமான அரசியல் வீழ்ச்சியின் மீட்சியும் புதிய நிலைமைகளை உருவாக்கக்கூடிய புதிய சிந்தனைகளை கோரி நிற்கின்றன.

மாணவர்களது சரிபாதியினரான பெண்களது கல்வி அவர்களது திருமணம் வரையிலான காசைக்கரியாக்கும் கண்காட்சி ஊர்வலமாக கொண்டாடப்படும் குடும்பம் சார்ந்த சமூகம் சார்ந்த விழுமியமும், தனியாள் உளச்சிதைப்பு மட்டுமின்றி சமூக நிலைப்பட்ட கூட்டு உளச்சிதைப்பும் ஆகும். இத்தகைய நிலை எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது, ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாத, உணர்ந்து கொள்ளாத சமூகம் விடுதலை பற்றி பேசுவதும் மிகப்பெரும் பொய் என்பதுதான் உண்மை.

பேராசிரியர் சி ஜெயசங்கர்.

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More