Home இலங்கை வடக்கிற்கு இலவசமாகத் தென்னங்கன்றுகள் – உரம்

வடக்கிற்கு இலவசமாகத் தென்னங்கன்றுகள் – உரம்

by editorenglish

வடக்கு மாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு முக்கோண வலயம் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு 5500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலவசமாக தென்னங்கன்றுகள் மற்றும் உரம் வழங்குவதற்காக 819 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு நீர் விநியோகித்துக்கும்நிலப்பரப்புக்கு அமைய நிவாரணம் வழங்கப்படுமென பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை  (14/03/2025)  நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு, செலவுத் திட்டத்தின்   பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தேங்காய் விநியோகத்தில் தட்டுப்பாடு காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.  ஒருகாலத்தில் இலங்கையில் இருந்து   தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது  இறக்குமதி செய்யப்படுகிறது. அரசுக்கு சொந்தமான தென்னந் தோட்டங்களுக்கு கடந்த  5 ஆண்டுகாலமாக  உரம்  வழங்கப்படவில்லை, தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை  என்று எதிர்க்கட்சியினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தேங்காய் தோட்டங்களை முறையாக பராமரிக்காமல்,  சிறந்த விளைச்சலை  எதிர்பார்க்க  முடியாது. சிலாபம் மற்றும் குருநாகல் பகுதிகளில் உள்ள தெங்கு தோட்டங்களை  முறையாக பராமரிப்பதற்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில்  தெங்கு பயிர்ச்செய்கைக்கு உரிய காணிகளில் அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் துண்டாக்கப்பட்டன அழிக்கப்பட்டன.

தெங்கு  பயிர்ச்செய்கை தொடர்பில் 10  ஆண்டுகால தேசிய கொள்கை திட்டத்தை தயாரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வருடாந்தாம் 3000 மில்லியன்  தேங்காய்களுக்கான  கேள்வி காணப்படுகின்ற நிலையில் கடந்த ஆண்டு 2,754 மில்லியன் தேங்காய்கள் மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 2,900 மில்லியன் தேங்காய்களை உற்பத்தி செய்யவும், 2020  ஆண்டளவில் 4,200  மில்லியன் தேங்காய்களை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ரஷ்யா அரசாங்கம் இலங்கைக்க இலவசமாக எம்.ஒ.பி வகையான உரத்தை வழங்கியுள்ளது. இந்த உரம் தெங்கு பயிர்ச்செய்கைக்கு முழுமையாக  வழங்கப்படும்.  4,000 ரூபாய் என்ற நிவாரண விலைக்கு வழங்கப்படும்.இதற்கமைய இந்த ஆண்டு 5,700 மில்லியன் ரூபா அளவில் தெங்கு பயிர்ச்செய்கையாளருக்கு நிவாரணம் வழங்கப்படும்.

30 ஆண்டுகால யுத்தத்தை எதிர்கொண்ட‌ வடக்கு மாகாணத்துக்கு இதுவரை காலமும் குறைந்தளவான அபிவிருத்திகளே வழங்கப்பட்டன. வடக்கு மாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு முக்கோண வலயத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். 10 இலட்சத்து 24 ஆயிரம் தென்னை கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண மக்களுக்கு தெங்கு பயிர்ச்செய்கைக்கு இலவசமாக உரம் வழங்கப்படும். இதற்கு மாத்திரம் 819 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீர்விநியோகித்தக்கும் ஏக்கர் நிலப்பரப்புக்கு அமைய நிவாரணம் வழங்கப்படும். தேயிலை தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேயிலைத் தோட்டங்களை முறையாக  பராமரிப்பதற்கு  நிவாரணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேயிலை தோட்டப் பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை  தனியார் தரப்பினருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் வாரம்  சமர்ப்பிக்கப்படும். பெருந்தோட்ட  பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இந்த ஆண்டு 4,700  வீடுகள் நிர்மாணிக்கப்படும்,  1300 வீடுகள் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த ஆண்டு 6,000 வீடுகள்  நிர்மாணிக்கப்படும் என்றார்.

Spread the love

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More